

ஹைதராபாத்: தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் தாசில்தார் மற்றும் 7 போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (28), கடந்த 2019-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 27-ம் தேதி இரவு, தனது ஸ்கூட்டர் ரிப்பேர் ஆகி தனியாக நின்றுக்கொண்டிருந்த போது, 4 பேர் கொண்ட கும்பல் அவரை ஒரு லாரியில் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து பெட்ரோல் ஊற்றி கொடூரமாக உயிரோடு எரித்துக் கொன்றது.
இதனை தொடர்ந்து 4 பேரையும் ஹைதராபாத் போலீஸார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர். இவர்களை விசாரணைக்காக அழைத்து சென்றபோது என்கவுன்ட்டர் மூலம் 4 பேரும் கடந்த 6.12.2019ல் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது போலி என்கவுன்ட்டர் என ஹைதராபாத் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டதால் 3 பேர் கொண்ட சிர்பூர்க்கர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் நேரில் வந்து உடல்களை ஆய்வு செய்யும் என்பதால், அதுவரை உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஒரு வாரத்துக்குள் உடல்கள் கெட்டு விடும் என மருத்துவர்கள் கூறியதைத் தொடர்ந்து, 23.12.2019 அன்று மாலைக்குள் 4 உடல்களுக்கும் மறு பிரேதப் பரிசோதனை நடத்தி, அவற்றை வீடியோ பதிவு செய்து உறவினர்களிடம் உடல்களை ஒப்படைக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
என்கவுன்ட்டரில் உயிரிழந்த முதல் குற்றவாளியாக கருதப்படும் முகமது ஆரிஃப் உடலில் 4, சிவா உடலில் 3, நவீன் உடலில் 2, சென்ன கேசவுலுவின் உடலில் 1 புல்லட் பாய்ந்ததற்கான காயங்கள் இருந்ததாகவும், உடலில் இருந்த மற்ற காயங்கள் குறித்தும் மருத்துவர்கள் ஆதாரங்களை சேகரித்தனர்.
இதனிடையே, உச்ச நீதி மன்றம் அமைத்த விசாரணை கமிஷன் ஹைதராபாத் வந்து, தெலங்கானா அரசு அமைத்த ஆணையத்தின் ஆய்வறிக்கையை துல்லியமாக ஆய்வு செய்தும், பல சாட்சியங்களை விசாரித்தும் இது போலி என்கவுன்ட்டர்தான் என்பதை உறுதி செய்தது. மேலும், இதில் தொடர்புடைய 7 போலீஸார் மற்றும் தாசில்தார் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு தண்டிக்க வேண்டுமென சிர்பூர்க்கர் ஆணையம் தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இந்த என்கவுன்ட்டரில் தொடர்புடைய 7 போலீஸாரும், தாசில்தாரும் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் ஆணையத்தின் இந்த அறிக்கை தொடர்பாக மேல் முறையீடு செய்தனர்.நேற்று இதனை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என உத்தரவிட்டது.