

பெங்களூரு: ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா (33) அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் மீண்டும் களமிறங்கினார். கடந்த 26ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாயின.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 25 வயதான பெண் அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது பாலியல் தொந்தரவு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல அவரது வீட்டில் வேலை செய்த 48 வயதான பெண் அளித்த புகாரின் பேரில் அவர் மீதும், அவரது தந்தை ரேவண்ணா மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரிக்கின்றனர்.
வாய்மையே வெல்லும்: பிரஜ்வல் - இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு, 24 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா நேரில் ஆஜராகாமல், தன் வழக்கறிஞர் மூலம் போலீஸாருக்கு பதில் அளித்துள்ளார். அதில், நேரில் ஆஜராக 7 நாட்கள் அவகாசம் வழங்குமாறு கோரியுள்ளார்.
இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா, தன் எக்ஸ் பக்கத்தில், “நான் தற்போது பெங்களூருவில் இல்லாததால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. இதை சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு தெரிவித்து விட்டேன். வாய்மை விரைவில் வெல்லும்”என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “மக்களவை உறுப்பினர் என்ற முறையில் பிரஜ்வல், தூதரக கடவு சீட்டை (டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்) வைத்துள்ளார். அதனை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் முடக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பி செல்ல தூதரக பாஸ்போர்ட், விசா உடனடியாக எப்படி கிடைத்தது? முன்னாள் பிரதமர் தேவகவுடா மத்திய அரசின் முக்கிய புள்ளிகளிடம் பேசி, அவரை தப்பிக்க வைத்திருக்கிறார்” என்றார்.