ஐ.நா. சபை கூட்டத்தின் இந்திய பிரதிநிதியாக பஞ்சாயத்து தலைவர் உட்பட 3 பெண்கள் தேர்வு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

அகர்தலா: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சார்பில் மே 3-ம் தேதி “நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மையமாக்குதல்: இந்திய வளர்ச்சிக்கு வழிகாட்டும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பெண்கள்” என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக மூன்று பெண்களை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.

இதில் திரிபுரா மாநிலம் செபஹிஜாலா மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சுப்ரியா தாஸ் தத்தாவும் ஒருவர் ஆவார்.

இதுகுறித்து மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் இயக்குநர் பிரசன்டே கூறும்போது, "இந்திய பெண்கள் அரசியல் தலைமைப் பொறுப்புகளை வகிப்பதன் மூலம் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களை ஐ.நா. சபையில் மேடையேற்றுவதற்கான வாய்ப்பு இது.

திரிபுரா, ராஜஸ்தான்,ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒரு பெண் என 3 பெண்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இவர்களில் சுப்ரியா அசாத்தியமான தலைமைப்பண்பு கொண்டவர்" என்றார்.

இதுகுறித்து சுப்ரியா தாஸ் கூறும்போது, "தினக்கூலி தொழிலாளியான நான் ஐ.நா. சபை கூட்டத்தில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களை அதிகாரப்படுத்துதல் குறித்து உரக்கப் பேசுவேன். கிராமப்புற பெண்களின் பொருளாதார சுயசார்பு நிலைக்கும் வளர்ச்சிக்கும் கைகொடுக்கும் சுய உதவி மகளிர் குழுக்கள் குறித்தும் பேசவிருக்கிறேன்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in