Last Updated : 16 Apr, 2018 07:04 PM

 

Published : 16 Apr 2018 07:04 PM
Last Updated : 16 Apr 2018 07:04 PM

‘மகள்கள் பாதுகாப்பாக இல்லை, பிரதமர் வெளிநாடு டூர் போகிறார்’- மோடியை விளாசிய பிரவீன் தொகாடியா

 

நாட்டில் மகள்கள் (பெண்கள்) பாதுகாப்பாக இல்லை, பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது, ஆனால், பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணத்துக்குக் கிளம்பிவிட்டார் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா விளாசியுள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர் பிரவீன் தொகாடியா. சமீபத்தில் நடந்த விஎச்பி சர்வதேச தலைவருக்கான தேர்தலில் தொகாடியாவின் ஆதரவாளர் ராகவ் ரெட்டியை இமாச்சலப் பிரதேச முன்னாள் ஆளுநர் கோக்ஜே தோற்கடித்தார் . இதனால், அதிருப்தி அடைந்த பிரவீன் தொகாடியா விஎச்பி அமைப்பில் இருந்து வெளியேறினார்.

ஏற்கெனவே மத்தியில் ஆளும் பாஜகவுக்கும், விஎச்பிக்கும் இடையே கடுமையான உரசல் இருந்த நிலையில், இப்போது அதை தொகாடியா வார்த்தைகளால் பிரதமர் மோடியை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் இயற்ற வேண்டும், பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஹமதாபாத் நகரில் நாளை பிரவீன் தொகாடியா காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க உள்ளார். இவருடன் சேர்ந்து இவரின் ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்.

வெளிநாட்டுப் பயணமா?

இந்நிலையில், அஹமதாபாத்தில் இன்று பிரவீன் தொகாடியா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘நம்முடைய ராணுவ வீரர்கள் எல்லையில் பாதுகாப்பாக இல்லை, விவசாயிகள் வறுமை, கடன் தொல்லையால் தற்கொலை செய்து வருகின்றனர், நமது மகள்கள்(பெண்கள்) நாட்டில் பாதுகாப்பாக இல்லை ஆனால், இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், பிரதமர் மோடி வெளிநாட்டுக்குப் புறப்பட்டுவிட்டார்’ என்று கடுமையாக விமர்சித்தார்.

எங்கள் பின்னால் குஜராத்

இதற்கிடையே விஎச்பி செய்தித்தொடர்பாளர் ஜெய் ஷா கூறுகையில், ’’பிரவீன் தொகாடியாவுடன் ஏறக்குறைய 5 ஆயிரம் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்க உள்ளனர். ஒட்டுமொத்த குஜராத்தும் தொகாடியா பின்னால்தான் இருக்கிறது.

ஏற்கெனவே, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஎச்பி நிர்வாகிகள், தலைவர்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டனர். பாஜக எங்களுக்குச் செய்து கொடுத்த சத்தியம், உறுதிமொழி ஆகியவற்றை நினைவுபடுத்த நாளை முதல் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம்.

இந்த உண்ணாவிரதத்தின் போது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, சிறப்பு உரிமைச்சட்டம் பிரிவு 370-ஐ  ரத்து செய்வது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்துவோம். பிரவீன் தொகாடியா புதிதாக எந்தவிதமான கோரிக்கையும் முன்வைக்கவில்லை. இந்த உண்ணாவிரதம் அஹமதாபாத்தில் உள்ள ஜிஎம்டிசி மைதானத்தில் நடக்கும்’’ எனத் தெரிவித்தார்.

ஒரே மாநிலம்

பிரதமர் மோடியும், விஎச்பி தலைவர் பிரவீன் தொகாடியும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருவரும் ஒன்றாகப் பணியாற்றி, காலப்போக்கில் பிரிந்தவர்கள், இதில் பிரதமர் மோடி அரசியல் ரீதியாக வளர்ச்சி பெற்றுவிட்டார்.

குண்டர்களா நாங்கள்?

முன்னதாக பிரவீன் தொகாடியா நேற்று பேசுகையில், ''கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு ஆதரவாகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தோம். ஆனால், பசுப் பாதுகாவலர்களாக இருக்கும் எங்கள் உறுப்பினர்களைக் குண்டர்கள் என்று மோடி வசைபாடுகிறார். ஜார்கண்ட் மாநிலத்தில் பசுப் பாதுகாவலர்கள் 11 பேர், வாழ்நாள் சிறை தண்டனை பெற்றுள்ளனர். இதுபோல் காங்கிரஸ் ஆட்சியில் கூட நடந்தது இல்லை'' என விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x