Published : 30 Apr 2024 09:04 PM
Last Updated : 30 Apr 2024 09:04 PM

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் தாமத நடவடிக்கை ஏன்? - கர்நாடக காங்கிரஸுக்கு பாஜக கேள்வி

புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்திருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முடிவை, அதன் கூட்டணி கட்சியான பாஜக வரவேற்றுள்ளது. அதேவேளையில், இந்த விவகாரத்தில் தாமதமாக நடவடிக்கை எடுத்ததாக கர்நாடகா அரசு மீது அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சட்டம் - ஒழுங்கு மாநிலத்தின் வசம் உள்ள நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற பாஜக தலைவர்கள் கர்நாடக காங்கிரஸ் அரசு மீது கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள‌து. இந்நிலையில், அவரது வீட்டில் வேலை செய்த 48 வயது பெண் அளித்த புகாரின் பேரில், தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா, பேரன் பிரஜ்வல் மீது ஞாயிற்றுக்கிழமை பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கர்நாடகாவில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக காங்கிரஸ் கட்சி, பாஜகவைச் சாடிய அடுத்த நாள், அதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. குவாஹாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, “பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாஜக கடுமையாக எதிர்க்கும்.

நாட்டின் பெண் சக்திக்கு ஆதரவு என்பதே பாஜகவின் தெளிவான நிலைப்பாடு. அங்கு நடைபெறுவது யாருடைய ஆட்சி. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தானே. அவர்கள் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? கர்நாடக மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை இது. இதில் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. கர்நாடக மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாஜக ஒருபோதும் சமரசம் செய்து கொள்வதில்லை. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு இந்த விவகாரம் குறித்து முன்பே தெரிந்திருந்தால், குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக ஏன் முன்பே நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா நீக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சட்டம் அதன் கடமையை செய்யும். குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக பாஜக சட்டத்தின் அனைத்து பலத்தையும் பயன்படுத்தும்" என்று தெரித்தார்.

மேலும், சந்தேஷ்காலி வழக்கு மற்றும் கர்நாடகா காங்கிரஸ் நிர்வாகியின் மகள் நேஹா ஹிரேமத் கொலை செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட குற்றங்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பற்றி பேசுகிறது என்று குற்றம்சாட்டினார்.

பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோ நீண்ட நாட்களுக்கு முன்பே வெளிவந்தும் பாஜக ஏன் மவுனமாக இருந்தது என்று கேட்டபோது,"வீடியோ வைத்திருப்பது குற்றம் இல்லை. ஆனால், பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது இப்போதுதான் தெரியவந்துள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x