Published : 30 Apr 2024 05:34 PM
Last Updated : 30 Apr 2024 05:34 PM
புதுடெல்லி: “மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழைகள், பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசிக்களுக்கு உரிமை வழங்கிய அரசியல் சாசனத்தை கிழித்து தூக்கி எறிந்துவிடும்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய ராகுல் காந்தி, அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை கையில் வைத்துக்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழைகள், பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசிக்களுக்கு உரிமை வழங்கிய அரசியல் சாசனத்தை கிழித்து தூக்கி எறிந்துவிடும்.
பாஜக இந்தப் புத்தகத்தை தூக்கி எறிய வேண்டும் என்று விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடியால் 22 முதல் 25 வரை தொழிலதிபர்களை கோடீஸ்வரர்களாக மாற்ற முடிந்தால், காங்கிரஸ் கோடிக்கணக்கான பெண்களை லட்சாதிபதிகளாக மாற்றும்.
தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல, இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம். காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்குவோம். காங்கிரஸின் மகாலட்சுமி திட்டம் நாட்டில் பெண்களை லட்சாதிபதிகளாக மாற்றும்.
பாஜக இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என்றால், ஏன் ரயில்வே மற்றும் பிற பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குகிறது?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT