Published : 30 Apr 2024 12:54 PM
Last Updated : 30 Apr 2024 12:54 PM

“பாஜக தேர்தல் அறிக்கை சுவடு தெரியாமல் காணாமல் போனது” - ப.சிதம்பரம் விமர்சனம்

ப.சிதம்பரம்

புதுடெல்லி: “காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக பாஜகவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை. அதனால்தான் மோடியும் மற்ற பாஜக தலைவர்களும் தங்கள் தேர்தல் அறிக்கையைப் பற்றி பேசுவதில்லை. பாஜகவின் தேர்தல் அறிக்கை சுவடு தெரியாமல் காணாமல் போனது” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர், “மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் பேசிய பிரதமர், நாட்டின் வளங்களில் பட்டியலின, பழங்குடியின, ஓபிசி மற்றும் ஏழைகளுக்கு முதல் உரிமை உள்ளது என்றார். அதேபோல பிரதமர் மன்மோகன் சிங் 2006 நவம்பரில் தேசிய வளர்ச்சி கவுன்சிலில் ஆற்றிய உரையிலும் இதையே கூறியிருந்தார். அந்தப் பட்டியலில் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளை மன்மோகன் சிங் சேர்த்திருந்தார்.

ஆனால் நரேந்திர மோடி ஏன் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளை மறந்துவிட்டார்?... நாட்டில் ஏழை சிறுபான்மையினர், ஏழைப் பெண்கள் மற்றும் ஏழை குழந்தைகளே இல்லையா? தேசத்தின் வளங்களில் ஏழைகள் முதல் உரிமை கோருவதுதான் சரியானது.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வேலை, வளம், மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக பாஜகவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை. அதனால்தான் மோடியும் மற்ற பாஜக தலைவர்களும் தங்கள் தேர்தல் அறிக்கையைப் பற்றி பேசுவதில்லை.

பாஜக-வின் தேர்தல் அறிக்கை சுவடு தெரியாமல் காணாமல் போனது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கோடிக்கணக்கான மக்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது. நாடு வளர்ச்சி அடைந்தாலும் கணிசமான எண்ணிக்கையில் ஏழைகள் இருப்பதை காங்கிரஸ் உணர்ந்திருப்பதால் தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏழைகளை உயர்த்தவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் இந்தியாவில் உள்ள ஆபத்தான ஏற்றத்தாழ்வுகளை குறைக்கவும், கொள்கைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x