கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்ற இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர் பாஜகவில் இணைந்தார்

கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்ற இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர் பாஜகவில் இணைந்தார்
Updated on
2 min read

இந்தூர்: மத்திய பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி பம் கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அடுத்த சில மணி நேரங்களில் அவர் பாஜகவில் இணைந்தார்.

மத்திய பிரதேசத்தில் 4 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 19-ம் தேதி 6 தொகுதிகளுக்கும் கடந்த 26-ம் தேதி 6 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்றாம் கட்டமாக மே 7-ம் தேதியும் 4-ம் கட்டமாக மே 13-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.

மே 13-ம் தேதி கடைசி கட்ட தேர்தலில் இந்தூர் உள்ளிட்ட 8 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 25-ம் தேதியுடன் நிறைவடைந்தது. கடந்த 26-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனுவை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும்.

இந்த சூழலில் காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி பம் நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அப்போது மத்திய அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, பாஜக எம்எல்ஏ ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் அக்சய் காந்தி பம் பாஜகவில் இணைந்தார். இதனை மத்திய அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா சமூக வலைதளம் வாயிலாக உறுதி செய்தார்.

இதுகுறித்து மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறும்போது, “காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் காரணமாகவே காங்கிரஸ் வேட்பாளர்கள்கூட பாஜகவில் ஐக்கியமாகி வருகின்றனர். அந்த கட்சி அழிந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

மத்திய பிரதேச பாஜக மூத்த தலைவர் ஆசிஷ் அகர்வால் கூறும்போது, “தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளுக்கும் அதிகமாக இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் வேட்பாளர்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைந்து வருகின்றனர். தேர்தலுக்கு முன்பாகவே அந்த கட்சி தோல்வியடைந்துவிட்டது" என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கண்டனம்: மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி கூறியதாவது: அக்சய் காந்தி பம் மீது பழைய வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் அவர் மீது 307-வது சட்டப்பிரிவு (கொலை முயற்சி) சேர்க்கப்பட்டது. மேலும் பல்வேறு வகைகளில் அவர் மிரட்டப்பட்டு பாஜகவில் இணைக்கப்பட்டு உள்ளார். பாஜகவின் சர்வாதிகாரமா, காங்கிரஸின் ஜனநாயகமா, எது தேவை என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

பாஜக வெற்றி உறுதி: இந்தூர் மக்களவைத் தொகுதியில் தற்போதைய பாஜக எம்பி சங்கர் லால்வாணி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி பம் உட்பட 3 பேர் நேற்று வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். மொத்த 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் தற்போது 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “ குஜராத்தின் சூரத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி உட்பட 9 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகி உள்ளனர். இதர வேட்பாளர்களில் பெரும்பாலானோர் சுயேச்சைகள் ஆவர். எனவே இந்தூர் தொகுதியில் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in