

புதுடெல்லி: மகாதேவ் சூதாட்ட வழக்கில் தொடர்புடைய நடிகர் சாஹில் கான் முன்ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், சத்தீஸ்கரின் ஜக்தல்பூரில் தங்கியிருந்த சாஹில் கானை சனிக்கிழமை கைது செய்ததாக எஸ்ஐடி அதிகாரி நேற்று தெரிவித்தார்.
நிதி மற்றும் ரியஸ் எஸ்டேட் நிறுவனங்களுக்கும், மகாதேவ் சூதாட்ட நிறுவனத்துக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து எஸ்ஐடி தற்போது விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் போலீஸார் தாக்கல் செய்த முதல்கட்ட தகவலின்படி மகாதேவ் சூதாட்ட செயலியை பயன்படுத்தி ரூ.15,000 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நடிகர் சாஹில் கான் மற்றும் 31 நபர்களிடம் இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அவர்களின் வங்கி கணக்குகள், மொபைல்போன், மடிக் கணினி மற்றும் பிற தொழில்நுட்ப சாதனங்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுவரை இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடைபெற்று வருவதாகவும் எஸ்ஐடி அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஸ்டைல், எக்ஸ்கியூஸ் மீ போன்றபடங்களில் நடித்த சாஹில் கானிடம் ஏப்ரல் 18-ம் தேதியன்று மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி தொடர்பாக 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அதனடிப்படையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, நடிகை தமன்னாவிடமும் விசாரணைக்கு ஆஜராககோரி மகாராஷ்டிர சைபர் செல்போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். இவர் ஏப்ரல் 29 அதாவது இன்று விசாரணைக்கு ஆஜராகி விளமக்களிக்க உள்ளார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக பாடகர் பாட்ஷா மற்றும் நடிகர்கள் சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரின் மேலாளர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மகாதேவ் செயலி தற்போது பல்வேறு புலனாய்வு அமைப்புகளால் சட்டவிரோத பணப் பரிவர்த்னை மற்றும் சூதாட்ட நடவடிக்கைகளுக்காக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.