

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என்று ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் சாமியார் ஆசாராம் பாபு. அவரது ஆசிரமத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் படித்து வந்தார். இந்நிலையில், சாமியார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2013-ல் சிறுமி புகார் செய்தார். இதையடுத்து ஆசாராம் இந்தூரில் கைது செய்யப்பட்டு ஜோத்பூருக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த வழக்கை எஸ்சி, எஸ்டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.
விசாரணை ஏப்ரல் 7-ம் தேதி நிறைவடைந்த நிலையில் இன்று (புதன்கிழமை) சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என்று தீர்ப்பளித்து ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அங்கிருந்து வரும் தகவலின் படி, இந்த வழக்கில் துணை குற்றவாளிகளாக அறியப்பட்ட சிவா, ஷில்பி ஆகியோரையும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
ஜோத்பூர் நீதிமன்றத்துக்கு வெளியே சாமியார் ஆசாராமின் ஆதரவாளர்கள் திரளாக கூடி நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர். இதன் காரணமாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.