

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தீவிரவாதிகள் மீது அனுதாபம் செலுத்துகிறது என பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி தீவு பகுதியில் ரேஷன் அரசி கடத்தல் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் அப்பகுதியைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் முக்கிய பிரமுகர் ஷாஜஹான் ஷேக் வீட்டில் சோதனை செய்வதற்காக அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனிடையே, ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சந்தேஷ்காலி பகுதி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் நிலங்களை அபகரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட ஷாஜஹான் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, ஷாஜஹானுடன் தொடர்புடைய 2 பேரின்வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். இதில் காவல் துறையினரின் துப்பாக்கி உட்பட சில துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
ஆனால், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் இந்தசோதனை குறித்து மாநில போலீஸாரிடம் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் கூறியிருந்தார். மேலும் சோதனை நடத்தியவர்களே ஆயுதங்களை கொண்டுவந்து அவற்றை கைப்பற்றியதாக கூறுகின்றனர் என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசும்போது, “மக்களவைத் தேர்தலில் பொதுமக்களை மிரட்டி வாக்குகளை வாங்கி வெற்றி பெற மம்தாதிட்டமிட்டுள்ளார். சந்தேஷ்காலியில் ஷாஜஹான் மற்றும் அவரது ஆதரவாளர்களால் பாலியல் துன்புறுத்தல் பாதிக்கப்பட்ட பெண் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு பாஜக முழு ஆதரவு அளிக்கும்” என்றார்.
மேலும் முர்ஷிதாபாத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா பேசும்போது, “தீவிரவாதிகள் மீது மம்தா பானர்ஜி மென்மையாக நடந்து கொள்கிறார். வலுவான அரசு அமைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆனால் மிரட்டி பணியவைக்கும் அரசு வேண்டும் என மம்தா விரும்புகிறார்.
ஊடுருவல்காரர்களுக்கு சாதகமாக நடந்துகொள்ளும் அவருடைய அரசியலை நாங்கள் எதிர்க்கிறோம். அவருடைய அரசு தீவிரவாதிகள் மீது அனுதாபம் செலுத்துகிறது. இதனால் மக்கள் அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் மூலம் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மம்தா நம்புகிறார். இதன்மூலம் அவர் மிகப்பெரிய தவறு செய்கிறார். அவருக்கு மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள்.
சந்தேஷ்காலி பகுதியில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். இதன்மூலம் பாஜக பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் உறுதியாக இருப்பதை உணர முடியும்” என்றார்.