முதல் இரண்டு கட்ட தேர்தலில் பெண் வேட்பாளர்கள் 8% மட்டுமே போட்டி: அர்த்தமுள்ள மாற்றம் தேவை என கருத்து

முதல் இரண்டு கட்ட தேர்தலில் பெண் வேட்பாளர்கள் 8% மட்டுமே போட்டி: அர்த்தமுள்ள மாற்றம் தேவை என கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: மக்களவைக்கு நடைபெற்ற முதல் 2 கட்ட தேர்தலில், வெறும் 8 சதவீத பெண் வேட்பாளர்களே போட்டியிட்டுள்ளனர். இந்த குறைவான எண்ணிக்கை பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அரசியல் கட்சிகளின் தயக்கத்தை காட்டுவதாக உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மக்களவைக்கு முதல் கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 26-ம் தேதியும் நடைபெற்றன. இந்த இரண்டு கட்ட தேர்தல்களிலும் மொத்தம் 2,823 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 235 பேர் பெண்கள். இது வெறும் 8 சதவீதம் மட்டுமே். தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, பெண்களை முன்னிறுத்துவதில் அரசியல் கட்சிகளின் தயக்கத்தை காட்டுவதாக உள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 76 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கேரளாவில் நடபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் 24 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த இரண்டு கட்ட தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி 44 பெண் வேட்பாளர்களையும், பாஜக 69 பெண் வேட்பாளர்களையும் நிறுத்தியது. பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதை அரசியல் ஆர்வலர்கள் பலர் விமர்சித்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் டாக்டர் சுசிலா ராமசாமி கூறுகையில், ‘‘பெண் வேட்பாளர்களை அதிகம்முன்னிறுத்த அரசியல் கட்சிகள்ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியில் இருப்பதுபோல், அரசியல் கட்சி அமைப்புக்குள் பெண்களுக்கான ஒதுக்கீடு போதிய அளவில் இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் டாக்டர் இப்திகர் அகமது அன்சாரி கூறுகையில், ‘‘அரசியலில் பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்க சீர்திருத்தம் தேவை. வேட்பாளர் தேர்வில் பெண்களுக்கு அரசியல் கட்சிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்’’ என்றார்.

கட்சிகளுக்கு சவால்: பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் பெண்களை மையமாக வைத்துபல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. ஆனால், தேர்தலில் பெண்களை போதிய அளவில் போட்டியிட வைப்பது சவாலாகவே உள்ளது. அதனால் அரசியல் களத்தில் அர்த்தமுள்ள மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in