

புதுடெல்லி: ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் 17 சதவீதம் மட்டுமே நீர் மிச்சம் இருப்பதால் 1௦ ஆண்டுகள் காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மத்திய நீர்ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களை மத்திய நீர் ஆணையம் கண் காணித்து வருகிறது. இவற்றில் தென்னிந்தியாவில் உள்ள 42 நீர்த்தேக்கங்களின் சராசரி நீர் கொள்ளளவு 53.334 பில்லியன் கன மீட்டர் (பிசிஎம்) ஆகும். சமீபத்திய ஆய்வின்படி மேற் குறிப்பிட்ட நீர்த்தேக்கங்களில் தற்போது 8.865 பில்லியன் கன மீட்டர் அளவுக்கான தண்ணீர் மட்டுமே காணப்படுகிறது. இது நீர்த்தேக்கத்தின் கொள்ளளவில் 17 சதவீதமாகும்.
கடந்த பத்தாண்டுகளாகத் தென்னிந்திய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவில் 23 சதவீத தண்ணீர் இருந்து வந்தது. அதிலும் கடந்த 2023-ம் ஆண்டில் 29 சதவீத தண்ணீர் இருப்பு இருந்தது. இந்நிலையில், தற்போது 17 சதவீதம் மட்டுமே தென்னிந்திய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் மிச்சம் உள்ளதால் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு, வேளாண்மை நீர்ப்பாசன தட்டுப்பாடு மற்றும் நீர் மின் உற்பத்தியில் பின்னடைவு உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் உள்ளது.
இதற்கு முக்கிய காரணம், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நடப்பாண்டில் போதிய அளவு மழை பொழியவில்லை. இதே போன்று மகாநதி மற்றும் பெண் ணாறு படுகைகளுக்கு இடையே கிழக்கு நோக்கிப் பாயும் நதிகளிலும் நீர் வரத்து மிகக் குறைவாக உள்ளது.
இவ்வாறு மத்திய நீர் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.