அம்பானி, அதானிக்காக வாரிசு வரியை எதிர்க்கும் பாஜக: வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் புகார்

பிரசாந்த் பூஷண்
பிரசாந்த் பூஷண்
Updated on
1 min read

புதுடெல்லி: மக்களவை தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கைவெளியிட்டுள்ளது. அதில், ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,நாடு முழுவதும் சொத்துகள் கணக்கெடுக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு காங்கிரஸ் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா கூறும்போது, ‘‘அமெரிக்காவில் வாரிசு வரி உள்ளது. அதாவது ஒருவர் இறந்தால், அவருடைய சொத்துகளில் பாதி அரசுக்கு செல்லும். அவரது வாரிசுக்கு பாதி சொத்து செல்லும். இதுபோன்ற சட்டம் இந்தியாவில் இல்லை’’ என்று கூறியிருந்தார்.

இந்தக் கருத்துகளுக்கு பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா உட்பட பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், சாம் பிட்ரோடாவின் கருத்து தனிப்பட்ட கருத்து என்றும் காங்கிரஸ் கட்சியின் கருத்தில்லை என்றும் மறுப்பு தெரிவித்தனர். இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது எக்ஸ் வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியதாவது:

வாரிசு வரி விவகாரத்தில் சாம் பிட்ரோடா கருத்தில் காங்கிரஸ்கட்சி உறுதியாக இருக்க வேண்டும். இந்த வரியை கோடீஸ்வரர்களுக்கு மட்டும் விதிக்க வேண்டும். அந்த வரிப் பணத்தை நாட்டின் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்கு வதற்கும் பயன்படுத்த வேண்டும்.

இதுபோன்ற வரி எல்லா பணக்கார நாடுகளிலும் உள்ளது.அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களின் வாரிசுகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வாரிசு வரியை பாஜக எதிர்க்கிறது. அவர்களிடம் லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் உள்ளன. சொத்துகளை குவிப்பது குற்றமல்ல. ஆனால், அது எந்த எல்லை வரை? அமெரிக்காவில் வாரிசு வரி உள்ளது. உதாரணமாக ஒருவர் 100 மில்லியன் டாலர் சொத்து சேர்த்துள்ளார். அவர் இறந்த பின்னர் 45 சதவீத சொத்துகளை அவரது வாரிசுகளுக்கு மாற்றிக் கொள்ள முடியும். 55 சதவீத சொத்துகளை அரசு எடுத்துக் கொள்ளும்.

அதேநேரத்தில் இந்தியாவில் ஒருவர் 10 பில்லியன் டாலர் சொத்து சேர்த்து இறந்தாலும், அவரது வாரிசுகளுக்கு 10 பில்லியன் டாலரும் மொத்தமாக செல்லும். பொதுமக்களுக்கு எதுவும் கிடைக்காது. இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும். இவ்வாறு பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in