Last Updated : 24 Apr, 2018 04:11 PM

 

Published : 24 Apr 2018 04:11 PM
Last Updated : 24 Apr 2018 04:11 PM

‘காங்கிரஸ் கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக் கறை படிந்துள்ளது’- சல்மான் குர்ஷித் பேச்சால் சர்ச்சை

 பாபர் மசூதி தொடர்பான கலவரங்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதால் காங்கிரஸ் கட்சிக்காரர்களின் கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை படிந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பரபரப்பாகப் பேசியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் அலிகார் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சல்மான் குர்ஷித்திடம் ஒரு கேள்வி எழுப்பினார்.

அதில், கடந்த 1948-ம் ஆண்டுக்குப் பின் காங்கிரஸ் கட்சிதான் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்தது. கடந்த 1950-ம் ஆண்டுக்குப் பின் நடந்த ஹசன்புரா, மலியானா, முசாபர்பூர் ஆகிய கலவரங்கள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் நடந்தவையாகும்.

இந்தக் கலவரங்கள்தான் பாபர் மசூதி இடிப்புக்குப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்தன. பாபர் மசூதி இடிபட்டபோதிலும் காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது. காங்கிரஸின் கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை படிந்துள்ளது. உங்களின் கருத்து என்ன? என்று அந்த மாணவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பொறுமையாக சல்மான் குர்ஷித் பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது:

இந்தக் கேள்வி அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஆனால், நான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன். ஆதலால், காங்கிரஸ் கட்சி மீது சுமத்தும் குற்றச்சாட்டில் எனக்கும் பங்கிருக்கிறது

நீங்கள் கூறும் வார்த்தைகளை நான் ஏற்கிறேன். எங்களின் கரங்களில் ரத்தக்கறை படிந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அந்த ரத்தக்கறை உடனடியாக மக்களிடம் காண்பிக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், நீங்கள் புரிந்துகொண்டு, இனிமேல் இதுபோன்ற ரத்தக்கறை உங்கள் கரங்களில் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

நீங்கள் மற்றொருவரைத் தாக்கினால், ரத்தக்கறை படிந்த கரங்களாக நீங்களும் ஒருவராக மாறிவிடுகிறீர்கள். ஆதலால் வரலாற்றில் இருந்து அனுபவப் பாடங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு நீங்களே இதுபோன்ற சூழலை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். 10 ஆண்டுகளுக்குப் பின் இதே இடத்தில் நீங்கள் வரும் போது, உங்களிடம் இதேபோன்ற கேள்வி முன் வைக்கப்படக்காடாது. அந்தக் கேள்வி கேட்கப்படாத அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான்குர்ஷித்திடம் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து நிருபர்கள் கேட்டபோது அவர் பதில் அளிக்கையில், ''நான் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி கிடையாது. நான்தான் காங்கிரஸ் கட்சி. நான் காங்கிரஸ் கட்சிக்காகப் போராடுகிறேன். நான் என்ன கூறினேனோ அதை திரும்பக் கூறுவேன். நான் கூறிய வார்த்தை மனிதநேயத்துக்கானது'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x