Last Updated : 02 Apr, 2018 09:42 PM

 

Published : 02 Apr 2018 09:42 PM
Last Updated : 02 Apr 2018 09:42 PM

18-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கம்

18-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை முடங்கின. இதற்கு, காவிரி மீது அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் காரணமாக இருந்தன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பாகம் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி வாரத்தின் தொடக்க தினமான இன்றும் மக்களவை கூடியவுடன் அதிமுக உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர். தங்கள் கைகளில் காவிரி பிரச்சினையை குறிப்பிட்டு பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்தேசம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளில் எழுந்து நின்றபடி இருந்தனர். தங்கள் அளித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியபடி இருந்தனர்.

காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே, ‘எஸ்சி, எஸ்டிக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதையும், சிபிஎஸ்இ வினாத்தாள்கள் வெளியானதன் மீதும் அவையில் விவாதிக்க விரும்புகிறோம்’ எனக் குறிப்பிட்டார்.

மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான அனந்தகுமார், ‘எங்கள் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதிக்க அரசும் விரும்புகிறது. ஆனால், தற்கு முன்பாக அவையில் அமளி இல்லாமல் அமைதி திரும்ப வேண்டும்’ எனத் தெரிவித்தார். எனினும் தொடர்ந்த அமளியால் அவை கூடிய சில நிமிடங்களில் கேள்வி நேரமும் நடைபெறாமல் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு மீண்டும் கூடிய மக்களவையில் அமளி தொடரவே இன்று நாள் முழுவதிலும் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கு முன்பாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், ’அவையில் நிலவும் அமளியின் காரணமாக இன்றும் மத்திய அரசின் மீது பல்வேறு எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தம்மால் விவாதத்திற்கு எடுக்க முடியவில்லை’ எனத் தெரிவித்தார்.

இதேபோல், மாநிலங்களவையிலும் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் மத்திய அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு எதிராக செயல்படுவதாகக் கூறி கோஷம் எழுப்பியது. பல்வேறு வங்கிகளின் ஊழலை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி திரிணமூல் காங்கிரஸ். அமளி செய்தது. சிறப்பு அந்தஸ்திற்காக தெலுங்தேசம் கோர, காவிரி பிரச்சினையை முன்வைத்து திமுக, அதிமுக உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்.

இது, அவையின் துணைத்தலைவர் எம்.வெங்கய்யநாயுடு தனது இருக்கையில் அமருவதற்கு முன்பாகவே தொடங்ககப்பட்டு விட்டது. இதனால், அவையில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாமல் போனது. இன்றைய தினம் வெறும் ஆறு நிமிடங்களுக்காக நடைபெற்றது.

இது குறித்து மாநிலங்களவையில் பேசிய துணைத்தலைவர், ‘இதன்மூலம் நீங்கள் எதையும் சாதிக்க முடியாது. நாட்டு மக்கள் அனைவரும் இந்த தவறான நடவடிக்கைகளை நேரலையில் பார்த்து வருகின்றனர். நாடாளுமன்றத்தை வேடிக்கைக்குரியதாக நீங்கள் செய்வது கண்டனத்துக்குரியது’ என எச்சரித்தார். தொடர்ந்து அவர், இன்றைய நாள் முழுவதிலும் அவையை ஒத்தி வைத்தார்.

நாளை மீண்டும் கூடவிருக்கும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் இந்த அமளி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x