உ.பி | விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீராம்' எழுதிய 4 மாணவர்களுக்கு 50% மதிப்பெண்: 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்

உ.பி | விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீராம்' எழுதிய 4 மாணவர்களுக்கு 50% மதிப்பெண்: 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் பல்கலைக்கழக தேர்வு விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் என்று எழுதிய 4 மாணவர்களுக்கு 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு உ.பி.யின் ஜோன்பூரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் உள்ளது. கடந்த வருடம் பி.பார்ம் செமஸ்டர் தேர்வின் முடிவுகள் கடந்த ஆகஸ்டில் வெளியாகின. இதில் நன்கு படிக்கும் மாணவர்களை விட அதிகமாக நான்கு பேருக்கு 50% முதல் 54% வரை மதிப்பெண் கிடைத்துள்ளது.

இதில் சந்தேகம் எழுந்ததால் அந்த 4 மாணவர்களின் விடைத்தாள்கள், தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் வாங்கி பார்க்கப்பட்டது. இதில் நான்கு மாணவர்களுமே விடைகளுக்கு பதிலாக ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான், ஜெய் பஜ்ரங்பலி போன்ற வாசகங்களை மட்டும் எழுதி பக்கங்களை நிரப்பியிருந்தனர். இன்னொரு மாணவர், கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை எழுதியிருந்தார்.

இந்த விவகாரத்தில் விசாரணை கோரி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் திவ்யான்ஷு சிங் புகார் அளித்தார். இது தொடர்பாக ஆளுநர் ஆனந்திபென் படேல் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் வந்தனா சிங் விசாரணை நடத்தினார்.

இதில் இரண்டு பேராசிரியர்கள் லஞ்சமாக பணம் வாங்கிக் கொண்டு மதிப்பெண் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து வினய் வர்மா, ஆஷிஷ் குப்தா என்ற 2 பேராசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இதற்கு முன் பல மாணவர்களை தேர்வில் காப்பியடிக்க அனுமதித்ததாக புகார்கள் வெளியாகின. இவையும் உறுதி செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீதும் விசாரணை தொடங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in