

இரு இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் கைதான இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவர், யாருடைய உத்தரவின் கீழ் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர் என்று சோனியா காந்திக்கு பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஞாயிற்றுக்கிழமை பாஜகவை விமர்சித்துப் பேசுகையில், “சிலர் தேசப்பற்று என்ற முரசை கொட்டுகின்றனர். இவர்கள் மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள். மக்களை தவறாக வழிநடத்தி அதிகாரத்தை கைப்பற்ற விரும்புகின்றனர்” என்றார்.
இந்நிலையில் அருணாசலப் பிரதேச மாநிலம் இடாநகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், “நாட்டு மக்களின் தேசப்பற்று குறித்து சோனியா கேள்வி எழுப்புகிறார். இரு இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் கைதான இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவர், யாருடைய உத்தரவின் பேரில் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்? யாருடைய உத்தரவின் பேரில் டெல்லி அரசு இவர்கள் இத்தாலி திரும்ப வாய்ப்பளித்தது? இதற்கு சோனியா காந்தி பதில் அளிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடுமையான நிலை எடுத்திருக்காவிட்டால் அவர்கள் இந்தியா திரும்பியிருக்க வாய்ப்பே இல்லை” என்றார்.
காங்கிரஸை விமர்சித்து அவர் மேலும் பேசுகையில், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஒரு ஏமாற்று அறிக்கை. கடந்த தேர்தல் அறிக்கையில் 100 நாட்களுக்குள் விலைவாசியை குறைப்போம் என்று கூறினார்கள். ஆனால் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை.
அருணாச்சலப் பிரதேச மாணவர் நிடோ டானியா டெல்லியில் கொல்லப்பட்ட சம்பவம் எனக்கு ஆழ்ந்த துயரை அளித்தது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் பயணம் செய்த சோனியா இதுபற்றி எதுவும் கூறவில்லை. காஷ்மீரில் இந்திய வீரர்கள் பாகிஸ்தானியர்களால் கொல்லப்பட்டாலோ, டெல்லியில் வடகிழக்கு மக்கள் இனப் பாகுபாட்டால் பாதிக்கப்பட்டாலோ காங்கிரஸ் கட்சி கவலை கொள்வதில்லை.
100 கோடி இந்தியர்களும் தேசப் பற்றை சோனியாவிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டுமா? நாட்டு மக்களுக்கு அவர்களின் தேசப்பற்று குறித்து காங்கிரஸ் கட்சி சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை.
நாட்டின் கலாச்சாரமும் பண் பாடும் சிதைந்து வருகிறது. நாட்டின் தலைநகரில் பாலியல் பலாத்கார சம்பவங்களும், இனவெறியால் வடகிழக்கு மாநில இளைஞர் கொல்லப்படும் சம்பவமும் நடக்கிறது” என்றார் மோடி.
அசாம் மாநிலம், விஸ்வநாத் சாரியாலியில் பேசிய மோடி, “சோனியாவுக்கும் ராகுலுக்கு அதிகாரம் பற்றிதான் கவலை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் ஏற்கெனவே தீர்மானித்து விட்டனர். அவர்கள் காங்கிரஸை தோற்கடிக்க மட்டும் விரும்ப வில்லை” என்றார்.