

கடந்த 4 ஆண்டுகளாக நீதிபதி என கூறிக்கொண்டு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த நபரை குர்கான் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து குர்கான் நகர காவல்துறை இணை ஆணையர் (குற்றம்) விவேக் சர்மா கூறிய தாவது:
தொலைக்காட்சி சேனல் ஒன்றின் பெண் செய்தி வாசிப்பா ளர் புகார் கொடுத்தார். அதில், ஆஷிஷ் பிஷ்னோய் என்ற நீதிபதி ஆட்சேபணைக்குரிய வகையில் தன்னை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி வருவதாகக் கூறியிருந்தார்.
நீதிபதிகள் பட்டியலில் ஆய்வு செய்தபோது, அவரது பெயர் இல்லை. இதையடுத்து 2 குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒரு குழுவினர் குர்கானில் உள்ள பிஷ்னோய் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். மற்றொரு குழுவினர் ஹிசாரில் உள்ள அவரது வீட்டில் சோதனையிட்டு அவரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரது உண்மையான பெயர் ஆஷிஷ் சென் எனவும் கடந்த 4 ஆண்டுகளாக நீதிபதி என கூறிக்கொண்டு பலரை ஏமாற்றி யதும் தெரியவந்தது. அவரிட மிருந்து டொயோட்டா ஃபார்ட் யூனர் கார் கைப்பற்றப்பட்டது. அந்த காரில் இருந்த 2 சிவப்பு சுழல் விளக்குகள், ஆணையர் அலோக் மிட்டல் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 2010-ம் ஆண்டு முதல் குர்கானில் தங்கியிருந்த ஆஷிஷ், சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட ஆடம்பர காரில் அடிக்கடி வலம் வந்துள்ளார். அவருடன் 2 பாதுகாவலர்களும் இருந்துள்ளனர்.
ஹரியாணா நகரப்புற மேம்பாட்டு ஆணைய குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற்று தருவதாகக் கூறி பலரிடம் கோடிக் கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார்.
இதுதவிர, பெண்களை ஆட்சேபணைக்குரிய வகையில் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு அவர்களை மிரட்டி வந்ததும் தெரியவந்துள்ளது.
இதுவரை இவர் மீது 6 பேர் புகார் கொடுத்துள்ளனர் என சர்மா தெரிவித்தார்.