

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 25,753 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், தகுதி இல்லாத பலர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
சந்தேகத்திற்குரிய வகையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பட்டியலை தயார் செய்து தாக்கல் செய்யும்படி மேற்கு வங்க பள்ளி கல்வி ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஓஎம்ஆர் ஷீட் முறைகேடு, ரேங்க் மாற்றி போடப்பட்டவர்கள் என 5,300 பேரின் பட்டியலை மேற்கு வங்க பள்ளி கல்வி ஆணையம் தாக்கல் செய்திருந்தது. இதில் உயர் நீதிமன்றத்துக்கு திருப்தி இல்லை.
அதனால் கடந்த 2016-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25,753 பேரின் நியமனத்தையும் ஒட்டுமொத்தமாக ரத்து செய்த உயர் நீதிமன்றம், அவர்கள் தாங்கள் பெற்ற சம்பளத்தை ஆண்டுக்கு 12% வட்டியுடன் திருப்பி செலுத்தவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேற்கு வங்கத்தில் வேலையிழந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் மேற்குவங்க பள்ளிகல்வி ஆணையத்தின் தலைவர் சித்தார்த்த மஜும்தார் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் குரூப் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் 5,300 பேரின் பட்டியலை உயர் நீதிமன்றத்தில் வழங்கினோம். மீதமுள்ள 19,000 ஆசிரியர்கள் ஆணையம் வகுத்த தேவையான தகுதிகளை பெற்றிருக்கலாம்.
கடந்த டிசம்பர் முதல் நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்த 3 பதில் மனுவில் சந்தேகிக்கும் வகையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை வழங்கினோம். அதை சிபிஐயிடமும் பகிர்ந்து கொண்டோம். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
யாரும் ஓட்டுப்போட மாட்டார்கள்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, “அரசு ஊழியர்கள் உட்பட யாரும் பாஜக, மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டார்கள். உயர் நீதிமன்றம், சிபிஐ, என்ஐஏ, எல்லை பாதுகாப்பு படை, மத்திய ஆயுதப்படை அனைத்தையும் பாஜக வாங்கிவிட்டது.
தூர்தர்ஷனையும் காவி நிறத்துக்கு மாற்றிவிட்டது. அது இனி பாஜக மற்றும் மோடி பற்றிதான் புகழ்பாடும். அதனால் அதை பார்க்காமல் புறக்கணியுங்கள். கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.