

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும் அவரது கட்சியிலிருந்து வெளியேறிய அமர்சிங்கும் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பின் ஒரே மேடையில் தோன்றினர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜானேஷ்வர் மிஸ்ரா பெயரில் அரசுப் பூங்கா செவ்வாய்க்கிழமை திறந்துவைக் கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் முலாயம் சிங்குடன் அவரது முன்னாள் சகாவான அமர்சிங்கும் கலந்துகொண்டார்.
சுமார் 15 ஆண்டுகள் சமாஜ்வாதி கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்து, முலாய முக்கு நெருக்கமானவராக இருந்த அமர்சிங், 2010 ஜனவரியில் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்.
இந்த திடீர் சந்திப்பு குறித்து ‘தி இந்து’விடம் சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் கூறும்போது, “உ.பி.யில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் அமர்சிங் மீண்டும் முலாயமுக்கு தேவைப்படுகிறார். அமர்சிங்கை எதிர்த்து வரும் கட்சியின் மற்றொரு தலைவர் ஆசம்கான், முலாயமின் சகோதரர் ராம்கோபால் யாதவ் ஆகியோர் இந்த விழாவுக்கு வரவில்லை. என்றாலும் அவரை முலாயம் சமாதானப்படுத்திவிடுவார்” என்றன. 58 வயது அமர்சிங்கின், மாநிலங்களவை உறுப்பினர் பதவி இன்னும் சில மாதங்களில் முடிகிறது.