பதஞ்சலியின் தவறான விளம்பர வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்
Updated on
1 min read

புதுடெல்லி: கரோனா தொற்று காலத்தில், ஆங்கில மருந்துகளைவிட (அலோபதி) தங்கள் நிறுவனத்தின் ஆயுர்வேத மருந்துதான் சிறந்தது எனபதஞ்சலி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. இந்த விளம்பரத்துக்கு எதிராக இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விளம்பரத்தை நிறுத்த உத்தரவிட்டது. ஆனாலும் தொடர்ந்து வெளியிட்டதால் பதஞ்சலி நிறுவனம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் ஆசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பதஞ்சலி நிறுவனர்கள் பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகினார்.

பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா மன்னிப்புக் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகக் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி அப்போது தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், இந்த மன்னிப்பை முன்பே கேட்டிருக்கவேண்டும். அதை ஏன் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு ரோத்தகி, “ரூ.10 லட்சம் செலவில் மன்னிப்பு கோரி 67 செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்றார். அதற்கு நீதிபதிகள், “மன்னிப்பை முதன்மைப்படுத்தி பெரிய அளவில் வெளியிடப்பட்டுள்ளதா? பதஞ்சலி விளம்பரங்களைப் போல் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதா?” என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் விளம்பரங்களை மைக்ரோஸ்கோப் கீழ் வைத்து பார்க்கும்படியாக இல்லாமல் பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்ற கண்டனத்தைத் தொடர்ந்து பதஞ்சலி நிறுவனம் நேற்று பெரிய அளவிலான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.இதில் ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் மன்னிப்பு கோரியுள்ளனர்.

அந்த மன்னிப்பு விளம்பரத்தில், “உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், ஆணைகளுக்கு இணங்காததற்கு அல்லது கீழ்ப்படியாததற்கு தனிப்பட்ட முறையிலும் நிறுவனத்தின் சார்பாகவும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், “நிபந்தனையற்ற பொது மன்னிப்பு” என்பது முன்பை விட பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த விளம்பரத்தில் “22.11.2023 தேதி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதற்காக நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் விளம்பரங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட தவறுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், மேலும் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காது என்பதை முழு மனதுடன் உறுதியளிக்கிறோம்.

நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை மிகுந்த நேர்மையுடன் கடைப்பிடிப்போம் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம். நீதிமன்றத்தின் மகத்துவத்தை நிலைநிறுத்தவும், மாண்புமிகு நீதிமன்றம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கும் சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்கி நடப்போம் என்றும் நாங்கள் உறுதியளிக்கிறோம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் 30-ம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது குறிப் பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in