

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் அரசு கஜானா காலியாகி விட்டது, ஆந்திர மக்கள் ஒவ்வொருவர் மீதும் ஜெகன் அரசால் தற்போது தலா ரூ.2 லட்சம் கடன் சுமை ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று பாஜக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடன் தேர்தல் வியூகம் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
ஆந்திர அரசுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு போதிய நிதி அளித்து வந்தது. இருந்தபோதிலும், முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு, கடனாளி அரசாக தற்போது நிற்கிறது. இதுவரை மத்திய அரசிடம் ஜெகன்அரசு ரூ.13.5 லட்சம் கோடி வரை கடன் பெற்றிருக்கிறது.
இதன் மூலம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் மீதும் தலா ரூ.2 லட்சம் கடன் சுமைஏறியுள்ளது. கஜானாவை காலி செய்துவிட்டு, மக்கள் மீது வரிச்சுமையை கூட்டியுள்ளது ஜெகன் அரசு. விசாகப்பட்டினம் போதை மருந்து விநியோக நகரமாக மாறி உள்ளது. நிலம் அபகரிப்பு, ஆள் கடத்தல், போதைமருந்து விநியோகம், மணல் கடத்தல் போன்றவற்றின் மையமாக ஆந்திரா மாறி வருகிறது.
ஜெகன் அரசு ஊழலில் சுழலும் அரசாக மாறிவிட்டது. பாஜக கூட்டணி அரசு அமைந்ததும் ஆந்திராவின் அனைத்து பிரச்சினைகளும் களையப்படும். முன்னாள் பிரதமர் பி.வி நரசிம்ம ராவுக்கு பாரத் ரத்னா விருதை வழங்கி அவர் மீது பாஜக அரசுக்கு உள்ள மரியாதையை வெளிப்படுத்தினோம். வரும் 5 ஆண்டுகளில் ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் சட்டம் கொண்டு வரப்படும். இவ்வாறு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
இதில், எம்.பி. வேட்பாளர் பரத்,எம்.எல்.ஏ. வேட்பாளர் விஷ்ணுகுமார் ராஜு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.