

மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட தேசிய நீதித்துறை நியமன ஆணைய மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளின் நியமனங்களை இந்த ஆணையம் மேற்கொள்ளும். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவி உயர்வு, மாற்றல் குறித்தும் இக்குழு பரிந்துரை அளிக்கும்.
நீதிபதிகளின் பணியிடங்கள் காலியான 30 நாட்களுக்குள் இக்குழுவுக்கு தெரிவிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். ஓய்வுபெறும் நீதிபதிகள் குறித்த விவரங்களை ஆறு மாதங்களுக்கு முன்பே இக்குழுவுக்கு தெரியப்படுத்த வேண்டும். உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியை தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டும்.
நீதிபதிகள் நியமனத்தில் பணிமூப்பு, திறமை, தகுதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பரிந்துரை அளிக்க வேண்டும். நீதிபதிகள் நியமன ஆணையத்தின் இரண்டு உறுப்பினர்கள் நிராகரித்தால், சம்பந்தப்பட்டவரை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை அளிக்க முடியாது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து, அதன் தலைமை நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையை ஆணையம் பரிசீலித்து முடிவு செய்யலாம். ஆணையம் நேரடியாக ஒருவரை தேர்வு செய்தால், அவரது பெயரை சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.