Published : 24 Apr 2024 04:01 PM
Last Updated : 24 Apr 2024 04:01 PM

ஒடிசாவின் ‘லுங்கி அரசியல்’ - தமிழரான வி.கே.பாண்டியனை சாடும் பாஜக - பின்புலம் என்ன?

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் (இடது), பிஜேடி முக்கியத் தலைவர்கள் சஷ்மித் பத்ரா, ஸ்வயம் பிரகாஷ் மொஹபத்ரா (வலது)

புவனேஸ்வர்: ஒடிசாவில் சட்டப்பேரவைத் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் ஒருசேர நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் பரபரப்புப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தளத்தின் தலைவருமான நவீன் பட்நாயக் லுங்கி, மேல்சட்டையுடன் வாக்கு சேகரிக்கும் வீடியோ வெளியாகி அம்மாநில அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) பிஜு ஜனதா தள கட்சித் தலைமையகத்தில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களான சஷ்மித் பத்ரா, ஸ்வயம் பிரகாஷ் மொஹபத்ரா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் வழக்கமான பாரம்பரிய குர்தா - பைஜமா அல்லது இயல்பான பேன்ட் - ஷர்ட் அணிந்து வரவில்லை. மாறாக இருவரும் லுங்கி அணிந்து வந்திருந்தனர். இது கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் ஆடவர் அணியும் சாதாரண உடையாக அறியப்படுகிறது. இந்நிலையில், கட்சி தலைமையகத்துக்கு மூத்த தலைவர்கள் லுங்கியில் வந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

அப்போது தாங்கள் லுங்கி கட்டிவந்தது ஏன் என்றும் அவர்கள் விளக்கினர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடிசா முதல்வர் ஒரு வீடியோவில் லுங்கியுடன் கைகளில் 2 சங்குகளை ஏந்தியவாறு தோன்றிய வீடியோவை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். அந்த வீடியோவில் நவீன் பட்நாயக் லுங்கி, மேல்சட்டையுடன் சங்குகளை ஏந்தி “இதில் ஒன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, இன்னொன்று மக்களவைத் தேர்தலுக்காக. இரண்டிலும் சங்கு சின்னத்தில் வாக்களியுங்கள்” என்று பேசியிருப்பார்.

ஒடிசாவில் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 21 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுவதால் இரட்டை சங்குகளைக் கொண்டு அவர் பிரச்சார வீடியோவை வெளியிட்டிருந்தார். நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரியவராக அறியப்படும் தமிழரான வி.கே.பாண்டியனும் இரண்டு சங்குகளுடன் பிரச்சார வீடியோ வெளியிட்டுள்ளார். ஆனால், அதில் அவர் லுங்கி அணிந்திருக்கவில்லை.

தர்மேந்திர பிரதான் சாடல்: இந்த வீடியோக்களைப் பற்றி பேசிய பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான், “நீங்கள் அனைவரும் நமது வயது மூத்த நவீன் பாபுவை லுங்கியில் பார்த்திருப்பீர்கள். அந்தக் கட்சியின் ஒரு இடைத்தரகர் இருக்கிறார். அவர் ஏதேதோ செய்கிறார். அவர் நவீன் பாபுவை பைஜமா, குர்தாவில் தோன்றும்படி செய்திருக்கலாம். எனக்கு நவீன் பாபு மீது மிகுந்த மரியாதை உள்ளது. அவரைப் போன்ற வயதில் மூத்தவரை இப்படிச் செய்திருக்கக் கூடாது” என்று தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கடுமையாக சாடினார்.

இருப்பினும் அவர் இடைத்தரகர் என்று குறிப்பிட்டாரே தவிர வி.கே.பாண்டியனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் பேசியிருந்தார். நவீன் பட்நாயக் வெளி மாநிலத்தவரின் தாக்கத்தில் இருக்கிறார் என்று வி.கே.பாண்டியனை பாஜக வெளிப்படையாக விமர்சிப்பதும் உண்டு.

இந்நிலையில்தான் சஷ்மித் பத்ராவும், பிரகாஷ் மொஹப்த்ராவும் லுங்கியுடன் கட்சித் தலைமையகத்துக்கு வந்து பேட்டியளித்தனர். அப்போது சஷ்மித் பத்ரா, “மாநிலத்தில் கைத்தறித் துறை பொருளாதார பங்களிப்பை செய்து வந்தது. ஆனால், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடிசா கைத்துறி துறையையும், சம்பல்புரி லுங்கிகளையும் சிதைத்துவிட்டார். அவர் ஒடிசா மற்றும் சம்பல்பூர் கலாச்சாரத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளார்” என்று கூறினார்.

அதேபோல் பிஜு ஜனதா தள ஐடி பிரிவு தலைவர் ஸ்வயம் பிரகாஷ் எக்ஸ் தளத்தில், “நவீன் பட்நாயக் சம்பல்புரி லுங்கியை அணிந்திருந்தார். ஒடிசாவின் கலாச்சாரம் அது. நம் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கிண்டல் செய்த தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

ஒடிசா மாநிலம் இரட்டைத் தேர்தலை சந்திக்கும் வேளையில், நவீன் பட்நாயக்கின் இரட்டை சங்கு பிரச்சாரம் மக்களை வெகுவாக சென்றடைந்துள்ளது. அதனால் பாஜக காழ்ப்புணர்ச்சியில் இவ்வாறு லுங்கி அரசியல் செய்கிறது என்றும் பிஜு ஜனதா தள கட்சியினர் கூறி வருகின்றனர்.

வி.கே.பாண்டியனை வைத்து பாஜக மட்டும் அரசியல் பேசவில்லை காங்கிரஸும் பிஜு ஜனதா தளத்தை கடுமையாக சாடி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் ஒடிசா பொறுப்பாளர் அஜோய் குமார் அளித்த பேட்டி ஒன்றில், “ஒடிசா மாநிலம் ஒடியா மக்களுக்காகவே. ஆனால் சமீப காலமாக ஒடிசா அரசியலில் வெளி மாநிலத்தவர்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். ஒடிசாவின் சுரங்கத் தொழில், ஒடிசாவின் அதிகாரிகள் வட்டம் என எல்லாவற்றிலும் வெளி மாநிலத்தவர் தாக்கம் இருக்கிறது. ஒடியா மக்களுக்கு ஒடிசா திரும்பவும் வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதுதவிர அண்மையில் பாஜக வி.கே.பாண்டியனுக்கு வழக்கப்படும் பாதுகாப்பு பற்றி விமர்சித்திருந்தது. ஆர்டிஐ ஒன்றின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி கேபினட் அமைச்சர் அந்தஸ்து பெற்ற வி.கே.பாண்டியனின் பாதுகாப்புக்கு 74 மெய்க்காவலர்கள் உள்ளனர். இது தேவையற்ற பாதுகாப்புச் சலுகை என்று கூறியிருந்தது.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஒருபடி மேலே சென்று ‘ஒடிசா அரசியல் அவுட்சோர்ஸிங் முறையில் அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது’ என்று வி.கே. பாண்டியனை மறைமுகமாக சாடியிருந்தார்.

இந்நிலையில், நவீன் பட்நாயக்கின் லுங்கி வீடியோ வெளியாகி முதல்வர் எப்படி வெளி மாநிலத்தவரின் அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறார் என்று பிரச்சாரம் செய்யத் தோதாக அமைந்துவிட்டது.

யார் இந்த வி.கே.பாண்டியன்? - தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் வி.கார்த்திகேய பாண்டியன். 2000-ஆம் ஆண்டு குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற இவர் பஞ்சாப் மாநிலப் பிரிவின் ஐஏஎஸ் அதிகாரியானார். பிறகு ஒடிசா மாநில ஐஏஎஸ்அதிகாரி சுஜாதாவை மணமுடித்ததால், ஒடிசா மாநில அதிகாரியாக இடம்மாறினார். ஒடியா மொழித்திறனுடன் சிறந்த பணியின் காரணமாக அம்மாநில மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றிருந்தார் அதிகாரி பாண்டியன். இதனால், 2011 முதல் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக பணியாற்றினார்.

அப்போது இருவரின் நெருக்கம்வளர்ந்தது. இதனால் ‘நிழல் முதல்வர்’ என்று அழைக்கப்பட்டவரால், பிஜேடியின் சில தலைவர்கள் கட்சியிலிருந்து ராஜினாமா செய்ததும் நிகழ்ந்தது. இதன் உச்சமாக அதிகாரி பாண்டியன், கடந்த அக்டோபர் 23-ல் ஐஏஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதற்கான கால அவகாச நாட்களையும் பொருட்படுத்தாமல், அவரது ராஜினாமாவை மத்திய அரசு இரண்டு நாட்களில் ஏற்றது. இதையடுத்து ஒடிசா அரசின் முன்னோடி வளர்ச்சித் திட்டங்களின் தலைவராக கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x