பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா கட்சியில் இருந்து நீக்கம்

ஈஸ்வரப்பா
ஈஸ்வரப்பா
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா தனக்கும் தனது மகனுக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டார். ஆனால் பாஜக மேலிடம் இருவருக்கும் சீட் வழங்கவில்லை. இதனால் கோபமடைந்த ஈஸ்வரப்பா, ஷிமோகாவில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடப் போகிறேன் என அறிவித்தார்.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தொலைபேசியில் ஈஸ்வரப்பாவை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது ஈஸ்வரப்பா, “கர்நாடக பாஜக தலைவர் பதவியில் இருந்து எடியூரப்பாவின் இளைய மகன் விஜயேந்திராவை நீக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். இதனை பாஜக மேலிடம் ஏற்க மறுத்தது.

இதையடுத்து கடந்த வாரம் ஈஸ்வரப்பா ஷிமோகா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை ஏந்தியவாறு பேரணியும், பிரச்சாரமும் மேற்கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர், மோடியின் படத்தை பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். பாஜக தரப்பில் பல முறை வேட்பு மனுவை திரும்ப பெறுமாறு வலியுறுத்தியும் அவர் மனுவை திரும்ப பெறவில்லை. இதையடுத்து அவருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் லிங்கராஜ், “ஈஸ்வரப்பா பாஜகவின் கட்டளையை பின்பற்றாமல் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுவதை அனுமதிக்க முடியாது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட ஈஸ்வரப்பா கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கப்படுகிறார்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈஸ்வரப்பா கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடியை நான் ஆதரிக்கிறேன். ஆனால் எடியூரப்பா கர்நாடகாவில் பாஜகவை குடும்ப கட்சியாக மாற்றிவிட்டார். அவரிடம் இருந்து பாஜகவை காப்பாற்ற இந்த தர்மயுத்தத்தை தொடங்கியுள்ளேன். சாதி பலத்தை காட்டி எடியூரப்பா பாஜக மேலிடத்தை அச்சுறுத்தி வருகிறார். இந்த தேர்தலில் அவரது மகனை தோற்கடித்து எனது பலத்தை நிரூபிப்பேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in