ஆந்திர சட்டப் பேரவை தேர்தல்: 38 வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் மேலிடம்
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் வரும் மே மாதம் 13-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிசார்பில் சட்டப்பேரவை தேர்தலில்போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை கட்சியின்பொதுச் செயலர் கே.சி வேணுகோபால் நேற்று வெளியிட்டார்.
ஏற்கெனவே 114 வேட்பாளர்களின்பெயர்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. மேலும், இந்த பட்டியலில் இருந்து மொத்தம் 10 பேரின் பெயர்களை காங்கிரஸ் மேலிடம் நீக்கி உள்ளது. அதன்படி இதுவரை மொத்தம் 142 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிட்டுள்ளதாக பொதுச் செயலாலர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படிஇதுவரை காங்கிரஸ் கூட்டணி 175 தொகுதிகளுக்கு 150 தொகுதிவேட்பாளர்களை அறிவித்துள்ளது. மீதமுள்ள 25 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்கும் என தெரிகிறது.
இதேபோன்று, ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் இதுவரை 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள 4 மக்களவை வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவிக்க உள்ளது.
