Published : 23 Apr 2024 09:30 AM
Last Updated : 23 Apr 2024 09:30 AM

சூரத் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு: வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே வெற்றிக் கணக்கை தொடங்கியது பாஜக

சூரத் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலாலிடம் நேற்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்தல் சான்றிதழ் வழங்கப்பட்டது.

புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மூன்றாவது கட்டத்தில் அதாவது மே 7-ம் தேதி நடைபெற உள்ளது.கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் குஜராத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றியது.

இந்த நிலையில், 2024 மக்களவை தேர்தலில் சூரத் மக்களவைதொகுதியில் போட்டியிட்ட பாஜகவேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதையடுத்து, மக்களவை தேர்தலில் வாக்குகளை எண்ணுவதற்கு முன்பாகவே பாஜக தனதுவெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது. முன்னதாக, காங்கிரஸ் வேட் பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.

அவரை முன்மொழிந்த மூன்று பேர் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தாங்கள் நிலேஷ் கும்பானியின்வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை என்று மாவட்ட தேர்தல்அதிகாரியிடம் தெரிவித்ததையடுத்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதே விதியை பயன்படுத்திகாங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் சுரேஷ் பத்சலாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.

மாவட்ட தேர்தல் அதிகாரி சவுரவ் பார்தி கூறுகையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்பு மனுவில் போடப்படும் கையொப்பங்கள் உண்மையானதாக இருக்க வேண்டும். ஆனால், படிவங்களில் கையெழுத்திடவில்லை என்பதைமுன்மொழிந்தவர்கள் மறுத்துள்ளனர் என்றார். ஆனால், காங்கிரஸ்வேட்பாளர் நிலேஷ் கும்பானி,வேட்பு மனுவில் போடப்பட்ட கையெழுத்துகள் உண்மையா னவை. நம்பவில்லையென்றால் அவற்றை கையெழுத்து நிபுணர்களைக் கொண்டு சரிபார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால், வேட்புமனு பரிசீலனையின்போது வழங்கப்பட்ட வாக்கு மூலங்கள் மற்றும் பிரமாணப்பத்திரங்களின் அடிப்படையில் தேர்தல் அதிகாரி, காங்கிரஸ் வேட்புமனு நிராகரிக்கப்படுவதை உறுதிப்படுத்தினார். மேலும்,பிறகட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

குறிப்பாக, பகுஜன் சமாஜ் வேட்பாளர் பியாரிலால் பாரதி, லாக் கட்சியின் சோஹைல் ஷேக்,சர்தார் வல்லபாய் படேல் கட்சியின்வேட்பாளர் அப்துல் ஹமீத் கான்,சுயேச்சைகள் பாரத்பாய் பிரஜாப்தி, அஜித் சிங் பூபத்சிங் உமாத், கிஷோர் பாய் தயானி, பரைய்யா ரமேஷ்பாய் பர்சோத்தம்பாய் உள்ளிட்டோர் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

இதையடுத்து, பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வானதாக மாவட்ட தேர்தல் அதிகாரி சவுரவ் பார்தி அறிவித்தார்.இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக அக்கட்சியின் வழக்கறிஞர் பாபு மங்குகியா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x