Published : 16 Apr 2018 09:44 AM
Last Updated : 16 Apr 2018 09:44 AM

பாகிஸ்தானுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ள சீக்கியர்களை இந்திய தூதர் சந்திக்க அனுமதி மறுப்பு: வியன்னா உடன்படிக்கையை மீறியதாக இந்தியா ஆட்சேபம்

பாகிஸ்தானுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ள சீக்கியர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க, இந்திய தூதருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மத வழிபாட்டு தலங்களுக்கு இரு நாடுகளிலிருந்தும் பொதுமக்கள் பரஸ்பரம் யாத்திரை மேற்கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் உள்ளது. இதன்படி, வைசாகி திருவிழாவை முன்னிட்டு சுமார் 1800 சீக்கியர்கள் பாகிஸ்தானின் ஹசன் அப்தல் பகுதியில் உள்ள குருத்வாரா பஞ்சா சாஹிப்புக்கு கடந்த 12-ம் தேதி யாத்திரை சென்றனர்.

இதனிடையே, குருத்வாரா பஞ்சா சாஹிப்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைசாகி திருவிழாவில் பங்கேற்குமாறு பாகிஸ்தானுக்கான இந்திய தூதருக்கு, அந்நாட்டின் வெளியேற்றப்பட்டவர்கள் அறக்கட்டளை சொத்து வாரிய தலைவர் அழைப்பு விடுத்திருந்தார். இதன் அடிப்படையில் சீக்கிய யாத்ரீகர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக குருத்வாரா பஞ்சா சாஹிப்புக்கு இந்திய தூதர் புறப்பட்டார்.

ஆனால் அவரை தொடர்புகொண்ட வாரிய அதிகாரிகள் நடுவழியிலேயே திரும்பிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். இதனால் யாத்திரையாக வந்த சீக்கியர்களைச் சந்திக்க முடியாமல் திரும்பியுள்ளார் இந்திய தூதர். இதன்மூலம் அவர் தனது பணியை செய்யவிடாமல் தடுத்துள்ளனர். இந்த செயல் கண்டிக்கத்தக்கது. தூதரக உறவு தொடர்பாக நடைமுறையில் உள்ள வியன்னா உடன்படிக்கையை பாகிஸ்தான் அப்பட்டமாக மீறி உள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் அரசுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாத்ரீகர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக தூதரக அதிகாரிகள் யாத்ரீகர்களைச் சந்திப்பது வழக்கம். இந்த ஆண்டு அதற்கும் அனுமதி வழங்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுப்பதாக அந்நாட்டு தூதரும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுப்பதாக அங்குள்ள இந்திய தூதரும் கடந்த மாதம் பரஸ்பரம் குற்றம்சாட்டி இருந்தனர். இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண்பது என இருதரப்பும் ஒப்புக்கொண்ட 2 வாரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x