Last Updated : 18 Apr, 2018 08:12 AM

 

Published : 18 Apr 2018 08:12 AM
Last Updated : 18 Apr 2018 08:12 AM

பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்படக் கூடாது...

டந்த 50 ஆண்டுகளில் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்து நிலையான அரசை அளித்த சக்தி வாய்ந்த 3 பிரதமர்களைப் பார்த்துவிட்டது இந்தியா. காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி கடந்த 1971-ல் ஆட்சியைப் பிடித்தார். ராஜீவ் காந்தி 1984-ல் ஆட்சிக்கு வந்தார். மூன்றாவதாக பாஜகவின் நரேந்திர மோடி, இதேபோல் ஆட்சிக்கு வந்து ஐந்தாவது ஆண்டை நிறைவு செய்யப்போகிறார்.

இந்த 3 அரசுக்கும் ஒரு பொதுவான விஷயம். ஆட்சியின் கடைசி ஆண்டில் இந்த 3 அரசுகளுமே பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியவை.

இந்திரா காந்தி தனது ஆட்சியின் 5-வது ஆண்டில் அவசர நிலையையும் பத்திரிகை தணிக்கைச் சட்டத்தையும் கொண்டு வந்தார். இந்தியாவை சீர்குலைக்கும் நோக்கில் அன்னிய சக்திகளோடு கைகோத்துக் கொண்டு அரசுக்கு எதிராக விமர்சனம் செய்து பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து பலர் வழிக்கு வந்தார்கள். வராதவர்கள் கைது செய்யப்பட்டார்கள் அல்லது அரசே நிறுவனத்தை கையகப்படுத்தும் என மிரட்டப்பட்டார்கள்.

ராஜீவ் காந்தி 1987-88-ம் ஆண்டில் அவதூறு தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவந்தார். போபர்ஸ் சிக்கல், ஜெயில் சிங்கின் சவால், வி.பி. சிங்கின் எதிர்ப்பு போன்ற பல பிரச்சினைகளில் சிக்கியிருந்தார். அத்தனைக்கும் பத்திரிகைகள் மீதுதான் பழியைப் போட்டார். `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' மீது நூற்றுக்கும் மேற்பட்ட பொய் வழக்குகளைப் போட்டார்.

தற்போது மோடி அரசு, பொய் செய்திகளைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி பத்திரிகைகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அறிவிக்கப்பட்ட உடனேயே பிரதமர் மோடியின் தலையீட்டின் பேரில், இந்த நடவடிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. பிரச்சினை இன்னும் முடியவில்லை. பிரிண்ட் மீடியாவுக்கும் டிவிக்கும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவும் நியூஸ் பிராட்கேஸ்டிங் ஸ்டாண்டர்ட்ஸ் அத்தாரிட்டியும் இருப்பது போல, இணையதள மீடியாவுக்கும் ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு தேவை என அரசு தெரிவித்துள்ளது.

சமீப காலமாக ஆளும் கட்சியினருக்கு ஏற்பட்ட வீழ்ச்சியை அவர்களால் நம்பமுடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் பொய் செய்தி வெளியிடும் மீடியாதான் என குற்றம் சாட்டப்படுகிறது. அதனால்தான் மீடியாவின் வாயை அடைக்க முயற்சிக்கிறது.

1975 ஆரம்பத்தில் 20 சதவீத பணவீக்கம், ஜெயப்பிரகாஷ் நாராயணின் இயக்கம் போன்றவை காரணமாக வீழ்ச்சியில் இருந்தார் இந்திரா. அவருக்குப் பயந்து பல பத்திரிகைகள் பணிந்துவிட்டன. இதற்காக அடுத்த தேர்தலில் மக்கள் இந்திராவுக்கு எதிராக வாக்களித்தனர் என நாம் நம்பினால் அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகத்தான் இருக்கும். அவசர நிலையின் போது இருந்த ஒழுக்கமான நிலை பிரபலமாகத்தான் இருந்தது. கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டை மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் மீண்டும் அவர் வெற்றி பெற்றிருக்கக் கூடும்.

அவரது வீழ்ச்சிக்குப் பிறகு, அவரால் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட எதிரிகள் தலைவர்களாக உயர்ந்த பிறகு பத்திரிகை தணிக்கையின் கொடுமையை மக்கள் உணர்ந்தனர். உச்ச நீதிமன்றமும் கடந்த பல ஆண்டுகளாகவே பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆதரவாக இருந்து வருகிறது.

ராஜீவ் காந்தியும் தனது வீழ்ச்சிக்கு பத்திரிகைகள்தான் காரணம் என பழி சுமத்தி அவற்றை தண்டிக்க முனைந்தார். தலைசிறந்த இந்திய பத்திரிகையாளர்களும் பத்திரிகை முதலாளிகளும் தங்கள் பகையை மறந்து ராஜீவ் காந்திக்கு எதிராக ஒன்று கூடி கோஷமிட்டார்கள். அவசர நிலையின்போது கூட காணாத நிலை இது. ராஜீவ் பின்வாங்கினார்.

பாஜக அரசு தனது ஆட்சியின் கடைசி ஆண்டில் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. ஆனால் இந்திராவும் ராஜீவ் காந்தியும் சந்தித்த நெருக்கடியுடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை. 1975 மற்றும் 1988ம் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தற்போது இந்திய மீடியா மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்து, சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால் பத்திரிகைகள் மீதான வெகுஜன மதிப்பீடு பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. பத்திரிகை, டிவி, இணையதளம் என இயங்கு தளங்களின் அடிப்படையில் பிரிந்து இருக்கிறது. இதனால் ஆங்காங்கே சில விரிசல்கள் இருக்கத்தான் செய்கிறது. தனது தகவல், ஒளிபரப்பு அமைச்சகத்தின் மூலம் இந்த விரிசல்கள் மீது கத்தி வைக்க திட்டமிட்டு வருகிறது அரசு.

பத்திரிகைகளுக்கும் டிவிகளுக்கும் கட்டுப்பாட்டு அமைப்பு இருக்கிறது, ஆனால் இணையதள ஊடகத்துக்கு அப்படி எதுவும் இல்லை என்று அரசு சொல்லும்போதே, அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். மீடியாவின் பலத்தைக் குறைக்கும் யுக்தி இது.

இந்த வாரம் முழுவதும் காஷ்மீரில் கதுவா கிராமத்திலும் உ.பி.யின் உன்னாவ் கிராமத்திலும் சிறுமிகளுக்கு எதிராக நடந்த அநீதிதான் முக்கிய செய்தி. இரண்டிலும் நீதி கிடைக்க விடாமல் அரசு இயந்திரம் தடுக்கிறது. உ.பி.யில் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட எம்எல்ஏ தாமதமாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். காஷ்மீரில் எப்ஐஆர் போடவிடாமல் அரசியல்வாதிகளே தடுத்துள்ளனர். நிலைமை சாதகமாக மாறியதற்கு மூன்று தளங்களிலும் இயங்கிய மீடியாக்களே காரணம்.

அவசர நிலை அமலில் இருந்தபோது, பத்திரிகையாளனாக இருந்தவன் நான். அதேபோல், பத்திரிகை, டிவி, இணையதளம் என மூன்று தளங்களிலும் வேலை பார்த்தவன். பத்திரிகையாளர்களாகிய நாம், நமது அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும். ஏனென்றால் நமது சுதந்திரத்துக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது.

சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்,

முதன்மை ஆசிரியர்

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x