Published : 21 Apr 2024 06:44 PM
Last Updated : 21 Apr 2024 06:44 PM

‘‘இன்சுலின் வழங்காமல் கேஜ்ரிவாலை கொல்ல சதி’’ - ராஞ்சி கூட்டத்தில் சுனிதா கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

ராஞ்சி: "கேஜ்ரிவால் ஒரு சர்க்கரை நோயாளி. அவர் கடந்த 12 ஆண்டுகளாக தினமும் 50 யூனிட் இன்சுலின் எடுத்து வருகிறார். ஆனால் அவருக்கு திகார் சிறையில் இன்சுலின் வழங்கப்படவில்லை. ஏனெனில் அவரை கொல்ல விரும்புகிறார்கள்” என்று ராஞ்சி பொதுக்கூட்டத்தில் பேசிய சுனிதா கேஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோர் கைதை கண்டித்து இண்டியா கூட்டணி கட்சியின் கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த ராகுல் காந்தி திடீர் உடல்நலக்குறைவால் கூட்டத்தை தவிர்த்துள்ளார். இதனை அறிவித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "ராகுல் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரால் இன்று டெல்லியை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதேநேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தில் பங்கேற்பார்" என தெரிவித்திருந்தார்.

இண்டியா கூட்டணி சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பஞ்சாப் முதல்வர் பகவந் சிங் மான், அர்விந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அர்விந்த் கேஜ்ரிவால் மனைவி சுனிதா பொதுக்கூட்டத்தில் பேசுகையில், "சிறையில் கேஜ்ரிவால் சாப்பிடும் ஒவ்வொரு சோறும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. குற்றத்திற்கான ஆதாரம் இல்லாமல் கேஜ்ரிவாலை சிறையில் அடைத்தது சர்வாதிகாரம். கேஜ்ரிவாலையும், ஹேமந்த் சோரனையும் சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படாமலேயே சிறையில் அடைத்துள்ளனர். இது ஒரு சர்வாதிகாரம். என் கணவரின் தவறு என்ன? நல்ல கல்வி, சுகாதார வசதிகளை வழங்கியதா?.

தேசபக்தி அவரது இரத்தத்தில் உள்ளது. அவர் ஒரு முன்னாள் ஐஐடி மாணவர். அவர் நினைத்திருந்தால் வெளிநாடு சென்றிருக்கலாம். ஆனால் அவர் தேசபக்திக்கு முன்னுரிமை கொடுத்தார். ஐஆர்எஸ் ஆக இருந்த அவர் பொது சேவை செய்ய பணியை ராஜினாமா செய்தார். தற்போது மக்களுக்காக தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார்.

கேஜ்ரிவாலுக்கு அதிகார ஆசை இல்லை. அவர் நாட்டுக்கு சேவை செய்யவே விரும்புகிறார். என் கணவர் சிங்கம். சிறையில் இருக்கும்போதும் நாட்டைப் பற்றி அவர் கவலைப்படுகிறார்.

கேஜ்ரிவால் ஒரு சர்க்கரை நோயாளி. அவர் கடந்த 12 ஆண்டுகளாக தினமும் 50 யூனிட் இன்சுலின் எடுத்து வருகிறார். ஆனால் அவருக்கு திகார் சிறையில் இன்சுலின் வழங்கப்படவில்லை. ஏனெனில் அவரை கொல்ல விரும்புகிறார்கள்” என்று சுனிதா கெஜ்ரிவால் கூறினார்.

இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி ஊழல் குறித்து பேசும்போது, ​​ஒசாமா பின்லேடனும், கப்பர் சிங்கும் அகிம்சையைப் போதிப்பது போல் தெரிகிறது.

ஊழலுக்கு எதிராகப் பேசுகிறார் நரேந்திர மோடி. ஆனால் ஹேமந்த் சோரன், கேஜ்ரிவாலை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார். இப்போது மோடி வாஷிங் பவுடர் வந்துள்ளது. அது உங்கள் ஊழல்கள் அனைத்தும் தூய்மையாக்கும்" என்று கூறினார்.

கூட்டத்தில் பேசிய பகவந் சிங் மான், "பாரதீய ஜனதா கட்சி அல்ல, பாரதீய ஜூம்லா கட்சி." என்றார்.

தேஜஸ்வி யாதவ் கூறுகையில், "பாஜக தலைவர்கள் மீண்டும் மீண்டும் அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பேசுகின்றனர். இது பாபா சாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டம். அதை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை." என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x