Last Updated : 04 Apr, 2018 09:22 AM

 

Published : 04 Apr 2018 09:22 AM
Last Updated : 04 Apr 2018 09:22 AM

உத்தர பிரதேசத்தில் என்கவுன்ட்டருக்கு பயந்து காவல் நிலையங்களில் தூங்கும் ரவுடிகள்

உத்தர பிரதேசத்தில் என்கவுன்ட்டருக்கு பயந்து இரவில் காவல் நிலையங்களிலேயே ரவுடிகள் தூங்குகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் கடந்த 370 நாட்களில் சுமார் 1,339 என்கவுன்ட்டர்கள் நடைபெற்றுள்ளன. கிரிமினல் குற்றவாளிகள் உட்பட 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தின் மேற்குப்பகுதி கிரிமினல் நடவடிக்கைகள் நிறைந்தவை. அப்பகுதியின் நொய்டா, கிரேட்டர் நொய்டா, ஹாபூர், தாத்ரி, காஜியாபாத், அலிகர், புலந்த்ஷெஹர், மீரட், சஹரான்பூர், ஷாம்லி, முசாபர்நகர் ஆகியவற்றில் அதிகமான என்கவுன்ட்டர்களை காவல் துறையினர் நடத்தியுள்ளனர். எனினும், கிரிமினல் குற்றங்கள் அதிகரித்து வரும் பல மாவட்டங்களில் ஒரு என்கவுன்ட்டர் கூட நடைபெறவில்லை. இதனால், அதன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஐபிஎஸ் அதிகாரிகள் கூறும்போது, “என்கவுன்ட்டர் நடவடிக்கை மேற்கொள்ளாத எஸ்பிக்களுக்கு உயர் அதிகாரிகள் போன் செய்து என்கவுன்ட்டர்களில் ஈடுபட வற்புறுத்துகின்றனர். அதனால் எழும் புகார்கள், நீதிமன்ற வழக்குகளை பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் தைரியமூட்டுகின்றனர். இந்த என்கவுன்ட்டர்களுக்கு ‘ஆபரேஷன் ஆல் அவுட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.

கடந்த வாரம் முடிந்த ராமநவமி அன்றுமட்டும் 9 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. இது ஒரு தவறான நடவடிக்கையாகக் கருதப்பட்டாலும் இதுவரையில் பிடிபடாமல் இருந்த கிரிமினல் குற்றவாளிகள் 3,140 பேர் கைதாகி சிறையில் தள்ளப்பட்டு உள்ளனர். இவர்களில் 1,999 பேர் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி குற்றங்கள் செய்தவர்கள். 188 குற்றவாளிகள் தேசிய பாதுகாப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 175 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரிடமும் சேர்த்து ரூ.147 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. என்கவுன்ட்டர் நடவடிக்கைகளில் 4 போலீஸார் வீரமரணம் அடைந்ததுடன் 57 பேர் காயமடைந்துள்ளனர்.

பாஜக ஆட்சியின் முதல் என்கவுன்ட்டர் புலந்த்ஷெஹரில் தொடங்கியது. இங்கு மாதந்தோறும் 60-க்கும் மேற்பட்ட வழிப்பறி, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற நிலை மாறி தற்போது 5 அல்லது 6 குற்றங்கள் மட்டுமே நடைபெறுகின்றன. இங்கு 6 மாதங்களில் 28 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. 3 கிரிமினல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த என்கவுன்ட்டர்களை முன்னின்று நடத்திய புலந்த்ஷெஹர் எஸ்எஸ்பியும் தமிழருமான ஜி.முனிராஜ், ‘தி இந்து’ விடம் கூறும்போது, “ஆயுதங்களுடன் சுற்றும் கிரிமினல்களை பிடிக்க சென்றால் எங்கள் மீது தாக்குதல் நடத்துவது வழக்கம். உயிரை பணயம் வைத்து அவர்களை என்கவுன்ட்டர் செய்து பிடிக்கிறோம். ஜாமீனில் விடுதலையான பலரும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர். என்கவுன்ட்டருக்கு பயந்து கடந்த 3 மாதங்களில் 65 பேர் ஜாமீனை ரத்து செய்துவிட்டு சரணடைந்துவிட்டனர். அவர்கள் தற்போது சிறையில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

என்கவுன்ட்டருக்கு பயந்து இரவில் காவல் நிலையங்களிலேயே ரவுடிகள் தூங்குகின்றனர். சீதாபூரின் கிரிமினல் குற்றவாளியான ரஞ்சித் ஜாமீனில் வெளியே உள்ளார். இவர் தன் மீது எந்த பழியும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, இரவில் லஹர்பூர் காவல் நிலையத்துக்கு வந்து தூங்குகிறார். இவருடன் மேலும் 7 கிரிமினல்களும் காவல் நிலையத்தில் தூங்குகின்றனர் என்று அதன் ஆய்வாளர் இந்திரஜித்சிங் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x