கர்நாடக பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் மகள் கொலை: லவ் ஜிகாத் என தந்தை குற்றச்சாட்டு

நேஹா ஹிரேமத் கொலையை கண்டித்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.
நேஹா ஹிரேமத் கொலையை கண்டித்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹுப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத். தார்வாட் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹிரேமத் (24) கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் படித்த ஃப‌யாஸ் (25) நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்தில் நேஹாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து ஹுப்ளி போலீஸார் ஃபயாஸை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், நேஹா முதலில் என்னை காதலித்தார். பின்னர் குடும்பத்தினரின் எதிர்ப்பால் பிரிந்து சென்றார். திருமணம் செய்ய மறுத்ததால் அவரை கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

ஏபிவிபி மாணவ அமைப்பினர், பாஜக, பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பினர், நேஹா ஹிரேமத் கொலைக்குநீதி வேண்டி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் லவ் ஜிகாத் அதிகரித்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறும்போது, ''கொலைகுற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதனை மத ரீதியான அரசியலுக்கு பாஜக பயன்படுத்துகிறது'' என்றார். கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் கூறும்போது, “இது லவ் ஜிகாத் கிடையாது. தேர்தல் நேரத்தில் பாஜகவினர் இதனை பயன்படுத்தி இந்துக்களை ஒன்றிணைக்க முயற்சிக்கின்றனர்'' என்றார்.

இந்நிலையில் மாணவியின் தந்தை நிரஞ்சன் ஹிரேமத் கூறும்போது, “என் மகள் துணிச்சலானவள். அவனதுகாதலை ஏற்கவில்லை. இதன்காரணமாக ஒரு கும்பல் நீண்ட காலமாக எனது மகளுக்கு தொல்லை கொடுத்து வந்தது. எனக்கு தகவல் தெரிந்ததும் அவர்களை எச்சரித்தேன். இப்போது திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். கொலைக்காரனின் பின்னணியில் ஒரு கும்பல் இருக்கிறது. இதுஅப்பட்டமான லவ் ஜிகாத்'' என குற்றம்சாட்டினார். இந்நிலையில் கொலை செய்த ஃபயாஸின் தாயார்ஃபாத்திமா வெளியிட்ட வீடியோவில், ''என் மகன் செய்த செயலை மன்னிக்க முடியாது. அவனது குற்றத்துக்காக மாணவியின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்

கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் கூறும்போது, “எனதுவார்த்தைகள் கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை காயப்படுத்திஇருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வழக்கில் குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதி அளித்தார். மாணவி நேஹா ஹிரேமத் கொலையை முன்வைத்து ஏராளமானோர் காங்கிரஸை கண்டித்து வருவதால் மக்களவைத் தேர்தல் நேரத்தில் அந்த கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in