Published : 17 Apr 2018 08:01 AM
Last Updated : 17 Apr 2018 08:01 AM

2018-ம் ஆண்டில் சந்திராயண்-2 உட்பட 12 மாதங்களில் 12 மெகா திட்டங்கள்; இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அறிவிப்பு

2018-ம் ஆண்டில் 12 மாதங்களில் 12 மெகா திட்டங்களை செயல்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது.

மிகப்பெரிய செயற்கைக் கோள் வகைகளான இன்சாட் வகை செயற்கைக்கோள்களை இஸ்ரோ, பிரான்ஸிலுள்ள ஏரியன் ராக்கெட் நிறுவனம் மூலம் விண்வெளியில் செலுத்தி வருகிறது. இவை அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களாகும். அதே நேரத்தில் குறைந்த எடைகொண்ட ஜிசாட் வகை செயற்கைக்கோள்களை ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து இஸ்ரோ செலுத்தி வருகிறது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கே. சிவன் கூறிய தாவது: 2018-ம் ஆண்டில் இஸ்ரோ பல மெகா திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளது. இதற்காக 12 மாதங்கள், 12 திட்டங்கள் என்ற செயல் திட்டத்தை வகுத்து அதை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டில் சந்திராயண்-2 உள்பட பல திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டில் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 12 வரை 3 முக்கிய செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

அடுத்த 8 மாதங்களில் 9 முக்கிய திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்த முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மெகா திட்டம் என்ற அடிப்படையில் இதைச் செயல்படுத்துவதற்கான பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதில் முக்கியமானது சந்திராயண்-2 திட்டமாகும். ஏற்கெனவே சந்திராயண்-1 திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டது. சந்திராயண்-2 திட்டத்தில் ராக்கெட், நிலவில் இறங்கும் விண்கலம்(ஆர்பிட்டர்), நிலவில் இறங்கி சுற்றி வரும் வாகனம்(ரோவர்) ஆகியவை இருக்கும். நிலவின் சுற்றுவட்டப் பாதையை, சந்திராயண்-2 விண்கலம் அடைந்தவுடன் அதிலிருந்து ஆர்பிட்டர் பிரியும். அதிலிருந்து 6 சக்கரங்கள் கொண்ட ரோவர், நிலவில் இறங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளும். சந்திராயண்-2 விண்கலமானது, ஜிஎஸ்எல்வி-எப்10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும். அக்டோபரில் இத்திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.

இதைப் போலவே ஜிசாட்-11, ஜிஎஸ்எல்வி-எம்கே3-டி2, ஜிசாட்-7ஏ, ரிசாட்-1ஏ செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பவுள்ளோம். 12 மாதங்களில் 12 மெகா திட்டங்கள் என்ற இஸ்ரோவின் திட்டமானது, இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக இருக்கும்.

இவ்வாறு இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x