காஷ்மீர் கிராமத்தின் வாய்பேச முடியாத 3 சகோதரிகள் முதல்முறை வாக்களிக்க ஆர்வம்

காஷ்மீர் கிராமத்தின் வாய்பேச முடியாத 3 சகோதரிகள் முதல்முறை வாக்களிக்க ஆர்வம்
Updated on
1 min read

தோடா: ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள கந்தோ கிராமத்தைச் சேர்ந்த மூன்று வாய்பேச முடியாத சகோதரிகள் இன்று முதல் முறையாக வாக்களிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

2024 மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் தொகுதியில் நடைபெறுகிறது. இதில் பாஜக சார்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், முன்னாள் காங்கிரஸ் எம்பி சவுத்ரி லால் சிங், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி சார்பாக முன்னாள் அமைச்சர் சரூரி உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

உதம்பூர் தொகுதிக்கு உட்பட்டது தோடா மாவட்டம். இங்கு 105 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களில் 55 குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் பலர் காது கேளாத மற்றும் வாய்பேச முடியாதோர் ஆவர். இப்படி இந்த கிராமத்தில் வசிக்கும் 43 பெண்கள், பத்து வயதுக்கு உட்பட்ட 14 குழந்தைகள் என மொத்தம் 84 காது கேளாத மற்றும் வாய்பேச முடியாதோர் உள்ளனர்.

இத்தகைய குறைபாடுகளை கடந்து தோடா மாவட்டத்தின் கந்தோ கிராம வாசிகளான ரேஷ்மா பானோ (24), பர்வீன் கவுசர் (22), சைரா கதூன் (20) ஆகிய மூன்று காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத சகோதரிகள் நிச்சயம் தங்களது ஜனநாயக கடமையை இத்தேர்தலில் நிறைவேற்றுவோம் என்று உறுதிபூண்டுள்ளனர்.

வீடு தேடி வரும் அனைவருக்கும் தங்களது வாக்காளர் அட்டையை காண்பித்து சைகை மொழியில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை விளக்கி உள்ளனர். முதல் முறையாக வாக்களிக்கும் உற்சாகத்தில் இருக்கும் இந்த சகோதரிகளை கண்டு ஒட்டுமொத்த கிராமமும் உத்வேகம் பெற்றிருப்பதாக கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்.

தங்களது கிராமத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in