

ஆந்திர சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், தனக்கு பாத சனி இருப்பதாகக் கூறிய வனத்துறை அமைச்சருடன் நடிகையும் எம்.எல்.ஏ.வுமான ரோஜா காரசார விவாதத்தில் ஈடுபட்டார்.
சித்தூர் மாவட்டம் நகரி சட்டசபை தொகுதியிலிருந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகை ரோஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வியாழக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற ரோஜாவுக்கும் வனத்துறை அமைச்சர் பொஜ்ஜல கோபாலகிருஷ்ணா ரெட்டிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
முதலில் வனத்துறை அமைச்சர் பேசும்போது, “நடிகை ரோஜா வுக்கு பாத சனி உள்ளது. அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இருக்கும்வரை எஙகள் கட்சி ஆட்சிக்கு வரவில்லை. நல்ல வேளையாக அவர் இப்போது எங்கள் கட்சியிலிருந்து விலகி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு சென்றார். அதனால்தான் அந்தக் கட்சி ஆட்சிக்கு வரவில்லை” என கூறினார்.
இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி, அமைச்சரின் பேச்சை ஆமோதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ரோஜா பேசிய தாவது: சாதாரணமாக என் வாயில் நல்ல வார்த்தைகள் வராது, இப்போது நான் பேசுவதை மட்டும் கேளுங்கள். இதே அமைச்சர் 10 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் காரில் திருமலைக்கு சென்றபோதுதான் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
இதே அமைச்சர், மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மரணமடைவதற்கு ஒரு நாள் முன்பு அவரை சந்தித்து பூச்செண்டு கொடுத்தார். மறுநாளே ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்.
எனவே இவருக்குதான் பாத சனி உள்ளது என அவர் தெரிவித்தார். இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மேஜைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.