மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு அதிக வாக்குகளா? - தவறான செய்தி என ஆணையம் விளக்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கேரளாவின் காசர்கோடு மக்களவைத் தொகுதியில் தேர்தல் ஆணையம் சார்பில் அண்மையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட், காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் பூத் ஏஜென்ட் முகமது நாசர் கூறும்போது, “கடந்த 17-ம் தேதி நடைபெற்ற மாதிரி வாக்குப் பதிவின்போது 20 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் 4-ல் பாஜக சின்னத்தில் ஒரு பொத்தானை அழுத்தினால் அக்கட்சிக்கு 2 வாக்குகள் பதிவாகின. மற்ற வேட்பாளர்களுக்கான பொத்தானை அழுத்தினால் ஒரு வாக்கு மட்டுமே பதிவானது" என்றார். கேரளாவின் முன்னணி ஊடகங்களில் இதுகுறித்த செய்தி வெளியானது.

விவிபாட் வழக்கில், உச்ச நீதிமன்ற விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஊடக செய்திகளை சுட்டிக் காட்டினார். இதற்கு பதில் அளித்த துணை தேர்தல் ஆணையர் நிதிஷ், "கேரள ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை. இதுகுறித்த முழுமையான விவரங்களை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்வோம்" என்றார்.

காசர்கோடு தேர்தல் அதிகாரி மாநில தேர்தல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மாதிரி வாக்குப் பதிவின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 இயந்திரங்கள் மாற்றப்பட்டன. இது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. எங்களது விளக்கத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in