Published : 19 Apr 2018 09:33 AM
Last Updated : 19 Apr 2018 09:33 AM

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய கோடை விடுமுறையில் சிறப்பு ஏற்பாடுகள்; தினமும் இருப்பில் 3.5 லட்சம் லட்டு பிரசாதம்

திருப்பதி ஏழுமலையானை கோடை விடுமுறையில் தரிசிக்க வரும் பக்தர்களுக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பாக லட்டு பிரசாதம் தடையின்றி கிடைக்க தினமும் 3.5 லட்சம் லட்டுகள் இருப்பில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாசராஜு தலைமையில் அனைத்து தேவஸ்தான துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கோடை விடுமுறையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர், ஸ்ரீநிவாச ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோடை விடுமுறையையொட்டி, இம்மாதம் 15-ம் தேதி முதல், ஜூலை மாதம் 16-ம் தேதி வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோடைக்காலத்தில் நாடு முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருவார்கள் என்பதால், பிரதி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ஜூலை 16-ம் தேதி வரை, சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. விஐபி பக்தர்கள் அவர்கள் நேரடியாக வந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். மேலும் பக்தர்களுக்கு கூடுதலாக குடிநீர், இலவச மோர், சிற்றுண்டி, உணவு வசதிகள் செய்யப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்படுகிறது. உயர் ரக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடைபெறும்.

இந்த கோடைக்காலத்தில் தினமும் சுமார் 3.5 லட்சம் லட்டு பிரசாதங்கள் இருப்பில் இருக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாரத்திற்கு 1.27 லட்சம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் விநியோகம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்ரீநிவாச ராஜு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x