

தேர்தலுக்கான பொது அறிக்கையாக இண்டியா கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகள் தங்களது ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் கூட்டு உறுதிமொழியை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் மிக உறுதியுடன் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், பல்வேறு நிறுவனங்களின் கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாகவே உள்ளன. இது, களத்தில் எதிர்க்கட்சிகளிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பாஜகவை தோற்கடிக்க ஏதுவாக இண்டியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் ஒன்று சேர்ந்து தங்களது மாநிலங்களின் தலையாய பிரச்சினைகளை எடுத்துக்கூறி அதற்கு தீர்வு காணக்கூடிய வகையிலான ஒரு கூட்டு உறுதிமொழி ஆவணத்தை உருவாக்குவதற்கான முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக சித்தாந்தங்களுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளையும் ஒரே புள்ளியில் இணைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழி ஆவணம் இன்னும் 2-3 நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.