காங்கிரஸ், என்சி, பிடிபி ஆட்சியில் காஷ்மீரில் போலி என்கவுன்ட்டர்கள் நடைபெற்றன: அமித் ஷா குற்றச்சாட்டு

சம்பா மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமித் ஷா
சம்பா மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமித் ஷா
Updated on
1 min read

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், ஜம்மு சம்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜுகல் கிஷோர் ஷர்மாவுக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், “காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி (என்சி), மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) ஆகிய மூன்றும் வாரிசு அரசியல் கட்சிகள். அந்தக்கட்சித் தலைவர்கள் தங்கள் மகன்களுக்காகவும் மகள்களுக்காகவுமே உழைக்கிறார்கள். உங்களுக்காக அவர்கள் ஒருபோதும் உழைப்பதில்லை.

அவர்களின் ஆட்சியில் காஷ்மீரில் நிறைய போலி என்கவுன்ட்டர்கள் நடைபெற்றுள்ளன. காஷ்மீர் இளைஞர்கள் கையில் அவர்களே ஆயுதங்களைக் கொடுத்தனர். ஆனால், பிரதமர் மோடியோ காஷ்மீரில் வளர்ச்சிக்காக நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கால அவகாசத்துக்குள் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்.

பாஜக காஷ்மீரைக் கைப்பற்றவே இங்கு வருகிறது என்று பரவலாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. இல்லை, நாங்கள் பிராந்தியங்களை கைப்பற்றுபவர்கள் அல்ல. மக்களின் இதயங்களை வெல்லுபவர்கள்.

மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹ்பூபா முப்தி, காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டால் இங்கு மூவண்ணக் கொடியை ஏந்த யாரும் இருக்கமாட்டார்கள் என்று சொன்னார். இன்று பாருங்கள். சிறப்பு அந்தஸ்து போய்விட்டது. வானத்தில் நம் மூவண்ணக் கொடி உயரப் பறந்து கொண்டிருக்கிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in