Published : 25 Aug 2014 10:00 AM
Last Updated : 25 Aug 2014 10:00 AM

சமூக வலைதளங்களை பயன்படுத்திய பயங்கரவாதிகள்: நீதிமன்றத்தில் டெல்லி போலிஸ் தகவல்

இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள் சதி திட்டங்களை நிறைவேற்ற, தங்களிடையே தகவல் தொடர்புக்கு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பெருமளவில் பயன்படுத்தியதாக டெல்லி போலீஸ் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 நவம்பரில், டெல்லி புறநகர், மீர் விஹார் பகுதியில் சட்டவிரோத ஆயுதத் தொழிற்சாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்து பெருமளவு வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த ஜியாவுர் ரகுமான், தெஹ்சின் அக்தர், முகமது வக்கர் அசார், முகமது மரூஃப், முகமது சாகிப் அன்சாரி, இம்தியாஸ் ஆலம் ஆகிய 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை டெல்லி நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், “இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ரியாஸ் பக்தல் தலைமறைவாக உள்ளார். இவருடனும் சக உறுப்பினர்களுடனும் தகவல் தொடர்புக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பினர் சமூக வலைதளங்களை பெருமளவில் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் தங்களின் பயங்கரவாத திட்டங்களை நிறைவேற்றி வந்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

“சங்கேத வார்த்தைகளுடன் கூடிய கோப்புகள் மற்றும் ஆவணங்களை வெவ்வேறு நாட்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில் இருந்து நிம்பஸ், யாஹு, பல்டாக், ஜிமெயில், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் இந்த அமைப்பு பரிமாற்றம் செய்துவந்துள்ளது. இதை குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x