Published : 08 Apr 2018 02:06 PM
Last Updated : 08 Apr 2018 02:06 PM

இன்ஜின் இல்லாமல் 15 கி.மீ. பின்னோக்கிச் சென்ற ரயில்: பலநூறு பயணிகள் பெட்டிக்குள் சிக்கித் தவிப்பு

இன்ஜின் இல்லாமல் 15 கி.மீ. தூரம் பின்னோக்கி ஓடிய ரயில்பெட்டியில் சிக்கிய நூற்றுக்கணக்கான பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஒடிசா மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இன்ஜின் இல்லாமல் பயணிகளுடன் 15 கிலோமீட்டர் தூரம் பின்னோக்கி ஓடிய நிகழ்வு பயணிகளை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஒடிசாவின் பூரி நகருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. திட்லாகர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அப்போது மேலும் சில பெட்டிகளை இணைப்பதற்காக ரயில் இன்ஜினைக் கழற்றினர்.

இன்ஜின் கழற்றப்பட்ட நிலையில் பின்பக்கம் உள்ள சுமார் 10 ரயில் பெட்டிகள் நூற்றுக்கணக்கான பயணிகளுடன் எதிர்பாராதவிதமாக பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது. திடீரென ரயில் பெட்டிகள் தானாக பின்னோக்கி சென்றதைப் பார்த்து ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வாறு இன்ஜின் இல்லாமல் பெட்டிகள் மட்டும் 15 கி.மீ. தூரம் சென்றது. ரெயில் பெட்டிகள் இன்ஜின் இல்லாமல் பின்னோக்கிச் சென்றதைப் பார்த்த பயணிகள் அலறினர்.

பெட்டியை நிறுத்த எந்த வழியும் இல்லாததால் ரயில்வே ஊழியர்கள் திணறினர். ரயில் பெட்டிகள் பின்னோக்கி செல்லும் வேகத்தில் எந்த ரயிலும் வரக்கூடாது என்று அனைவரும் வேண்டிக்கொண்டனர். ரயில் பெட்டி செல்லும் வழியில் எதிரில் ரயில் எதுவும் வராமல் திருப்பி விடப்பட்டது.

பின்னர் வேகம் குறைந்த பெட்டிகள் தாமாக நின்றன. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சம்பல்பூர் ரயில்வே மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு பின் ரயில் பெட்டிகள் நின்றிருந்த இடத்திற்கு திட்லாகர் ரயில் நிலையத்தில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டு செல்லப்பட்டு ரயிலுடன் பொருத்தப்பட்டு மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x