

கர்நாடகத்தில் 362 பேரின் ஆட்சிப் பணி நியமன ஆணையை ரத்து செய்தது தொடர்பாக முதல்வர் சித்தராமையா உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் மாநிலம் தழுவிய தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி கூறியுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கர்நாடக ஆட்சிப் பணி தேர்வில் முறைகேடு நடந்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது. இதையடுத்து தேர்ச்சி பெற்ற 362 பேரின் பணி நியமன ஆணையை நிறுத்தி வைப்பது தொடர்பாக கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. முறையான விசாரணை நடத்தி தீர்ப்பு வெளியாகும்வரை பணி நியமன உத்தரவை அமல்படுத்த முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதை கண்டித்து தேர்ச்சி பெற்ற 362 பேரும் தங்களது குடும்பத்தினருடன் சுதந்திர பூங்காவில் கடந்த 28-நாட்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிர்க்கட்சிகளான பாஜக, முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இது குறித்து பெங்களூரில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முக்கிய தலைவரான எச்.டி. குமாரசாமி கூறியதாவது:
“கர்நாடக முன்னாள் முதல்வர்கள் ஜே.எச்.படேல், தரம் சிங் ஆட்சி காலத்தில் துணை முதல்வராக இருந்த சித்தராமையா, கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வில் 1500-க்கும் மேற்பட்டோருக்கு பணி வழங்குமாறு சிபாரிசு செய்துள்ளார். அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதில் தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் யாருமில்லை.
ஊழலை ஒழிப்பதாக பேசி வரும் சித்தராமையா லஞ்சம் வாங்கிக்கொண்டு சிபாரிசு கடிதம் கொடுத்தார் என்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் இப்போது ஊழல் நடந்ததாக புகார் வந்ததும் தேர்ச்சி பெற்ற 362 பேரின் பணி நியமன ஆணையை ரத்து செய்தது வேடிக்கையாக இருக்கிறது. தன் மீது தவறே இல்லையென்றால் இவ்விவகாரத்தை உடனடியாக நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்.
கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஊழலற்ற நிர்வாகத்தை நிலைநாட்ட விரும்பினால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சித்தராமையா நடவடிக்கை எடுக்க வேண்டும். 362 பேருக்கு பணி நியமன ஆணையை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சித்தராமையா உடனடியாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவோம்” என்றார்.
காங்கிரஸார் போராட்டம்
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது ஆதாரமற்ற புகார்களை தெரிவித்து வரும் குமாரசாமிக்கு எதிராக பெங்களூரில் இளைஞர் காங்கிரஸார் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி சுதந்திர பூங்காவில் திரண்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.