Published : 16 Apr 2018 08:08 AM
Last Updated : 16 Apr 2018 08:08 AM

வளரும் தலைமுறைக்கு வனங்கள் மிஞ்சுமா..?

ந்திய அரசின், தேசிய வனக் கொள்கை (வரைவு) அறிக்கை 2018 வெளியாகி உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, வனக் கொள்கை, திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை என்ன சொல்கிறது...?

காடுகள் காப்பாற்றப் பட வேண்டும்; காடு சார்ந்த தொழில்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்; காடுகளை நம்பி வாழ்வோரின் பொருளாதார நிலை மேம்பட வேண்டும்; காடு வளர்ப்பில், அறிவியல் தொழில் நுட்ப வசதிகள் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்... இந்த நோக்கங்கள் முழுமையாக நிறைவேறத் தேவையான கொள்கை நிலைப்பாடு குறித்த, முன் நோக்குப் பார்வையை வரைவு அறிக்கை பட்டியலிடுகிறது.

1. முகப்புரை 2. இலக்கு & குறிக்கோள்கள் 3.வன மேலாண்மையின் முக்கிய கோட்பாடுகள் 4. வியூகம் (திட்டம்) என்று நான்கு பாகங்கள் கொண்டுள்ளது 10 பக்க வரைவுக் கொள்கை. . ‘கொள்கை அறிக்கை' ஏன் சுமார் 10 பக்கங்களுக்கு நீள வேண்டும்..? 10 வாக்கியங்களில் ‘நறுக்'கென்று சொல்லி இருக்கலாமே...! அதிலும், 'மொழி நடை' இருக்கிறதே... அப்பப்பா! சட்டங்கள், விதிமுறைகள், அறிவிக்கைகள், கொள்கை விளக்கங்கள்.... இவை எல்லாம், எளிதில் புரிந்து கொள்ள முடியாத நடையில் ஏன் இருக்க வேண்டும் என்று சத்தியமாகப் புரியவில்லை.

சரி போகட்டும். வரைவுக் கொள்கையில், சில நல்ல அம்சங்கள் பளிச்சென்று தெரிகின்றன. இதே போல, சில மறைமுக அம்சங்களும் இதிலே பொதிந்து கிடப்பதாகப் புகார் கூறப்படுகிறது. ‘இந்த வரைவு அறிக்கையை முழுவதுமாகத் திரும்பப் பெற்று, வன ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் நிபுணர்களைக் கொண்டு, புதிய கொள்கை வரையப் பட வேண்டும்' என்றும் குரல் எழுப்பப்படுகிறது. இந்திய அரசு - சுற்றுச் சூழல், வனம் மற்றும் தட்பவெப்ப மாற்றம் அமைச்சரவை - வனக் கொள்கைப் பிரிவு - F.No. 1-1/2012-FP(Vol4) தனது முகப்புரையில், வனங்களின் வருவாய்த் திறன் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு வழி கோலியதாக, 1988-ம் ஆண்டு வனக் கொள்கையைப் பாராட்டுகிறது. நாமும் பாராட்டுகிறோம்.

‘வனம் - வருவாய்’ கண்ணோட்டமே தவறு என்பதை ஏற்றுக் கொண்டது 1988 வனக்கொள்கை. வனம் - உண்மையில், பூமித் தாயின் புனிதப் பொட்டு. சுற்றுச்சூழல் சம நிலையில், பல்லுயிர் வாழ்வாதாரங்களில் வனத்தின் பங்கு அளப்பரியது. எல்லாவற்றையும், பணத்தின் மதிப்பீடு கொண்டா அளவிடுவது..? ‘வருவாய்’ ஈட்டுகிற களமாகக் காடுகளைப் பார்ப்பது, சகிக்க முடியாத குற்றம். இந்த வகையில், வனக் கொள்கை 1988, சரியான பாதையைத்தான் தேர்ந்தெடுத்தது. வரைவு அறிக்கையே குறிப்பிடுவது போல, அதன் முழுப் பயனும் கிடைத்து வருகிறது.

“மக்கள் தொகைப் பெருக்கம், தொழில் மயமாக்கம், விரைந்த பொருளாதார வளர்ச்சி ஆகியன இருந்தாலும், 1988 கொள்கை நிறைவேற்றத்தின் காரணமாக, வனப் பரப்பு அதிகரித்து இருக்கிறது; காட்டு நிலங்களைப் பிற காரணங்களுக்குப் பயன்படுத்துதல் குறைந்து இருக்கிறது.” (பத்தி 1.14). பிறகு, புதிய கொள்கைக்கு என்ன அவசியம் இப்போது...?

“காடுகள், வன விலங்குகள், சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு, சர்வதேச கூட்டங்களில் இந்தியா பங்கேற்று வருகிறது. அங்கெல்லாம் முன் வைக்கப்பட்ட, பல இலக்குகளுக்கு, இந்தியா கடமைப் பட்டு இருக்கிறது. தேசிய அளவிலும், பல்வேறு கருத்தரங்குகளில் பல நோக்கங்கள் முன் வைக்கப்பட்டன. இந்த இலக்குகள், நோக்கங்களை, வனக் கொள்கையில் கொண்டு வருவது அவசியம் ஆகிறது.” “பல்லுயிர்ப் பாதுகாப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் வனங்களின் சுற்றுச்சூழல் அமைப்பு முறைச் சேவைகளின் விரிவுக்கான தேவை, இத்துறையில் தொடர்ந்து குறைந்து வரும் முதலீடுகள் ஆகியன புதிய சவால்களை முன் வைக்கின்றன. ஆகவே 1988 கொள்கையைத் திருத்த வேண்டிய தேவை இருக்கிறது.”

“இயற்கைக் காடுகளைப் பாதுகாத்தல்; மறு சீரமைப்பு மூலமாக, வனத் தரம் இழப்பைத் திருத்தி அமைத்தல், மண் அரிப்பைத் தடுத்தல், வனத் தாவரங்களின் ஆரோக்கியத்தை பேணுதல், வனத்துக்கு அல்லாத காரணங்களுக்குக் காட்டு நிலங்களைப் பயன்படுத்துதலைத் தடுத்து, காடுகளைப் பாதுகாத்தல்.... என்று தொடங்கி, நகரப் பகுதிகளைப் ‘பசுமை’ ஆக்குதல் வரை, தேசிய வனக் கொள்கையின் வழிகாட்டு நோக்கங்களாக 16 அம்சங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து வருகிறது - காடு மேலாண்மையின் முக்கிய கோட்பாடுகள்.

சுற்றுச் சூழல் சமன்பாடு, பல்லுயிர்ப் பாதுகாப்பு குறித்துப் பேசுகிற இந்தப் பகுதி, பூர்வகுடிகள் மற்றும் காடுகளை நம்பி வாழும் மக்களின் வருவாய் பெருகும் விதத்தில், மருத்துவப் பயிர்கள் மற்றும் மூங்கில் வளர்ப்பு ஆகியவற்றின் மேலாண்மையில் கவனம் செலுத்தப் போவதாகக் கூறுகிறது. (பத்தி 3.6) நகரங்கள் உட்பட, வனப்பகுதிகளுக்கு வெளியே, உள்ள நிலப்பரப்பில் 1/3 பாகம், மரங்கள் அடர்ந்த பகுதியாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். (பத்தி 3.7) நிறைவுப் பகுதியாக, வியூகம் / திட்டம். சட்ட விரோதமாக மரங்களை வெட்டுதல் (4.1.1.a) காட்டுத் தீ தடுப்பு (4.1.1.b) இயற்கைக் காடுகள்,வனத் தாவரங்களின் திறன் மேம்படுத்துதல் (4.1.1.c. &d) முதலாக, வன வேளாண்மை, பண்ணைக் காடுகள், பசுமை நகரங்கள் என்று பலவற்றைப் பட்டியல் இடுகிறது. இந்தப் பகுதியில் பல செய்திகள் காணப்படுகின்றன. “காடுகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலகங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான தேவை இருக்கிறது”. ‘இந்த துறையில் போதுமான முதலீடுகள் வருவதில்லை’; வனம் சார்ந்த சுற்றுலாக்களை ஊக்குவிக்க வேண்டும்; இது மட்டுமல்ல, பன்னாட்டு சந்திப்புகள், கருத்தரங்குகளில், ‘நீடித்த வன வளர்ச்சிக்கு’ சிலவற்றை செய்வதாக நாம் ஒப்புக் கொண்டுள்ளோம். இவை நிறைவேறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்’’. வனங்களைக் காப்பாற்றுவதையும் மரம் வளர்ப்பையும் ஒன்றாக நிறுத்துகிற முயற்சி தெரிகிறது.

இதைச் சில தலைவர்கள் எதிர்த்தும் இருக்கிறார்கள். மறைமுகமாக, ‘கார்ப்பரேட்' நிறுவனங்களுக்குப் பயன்படுகிற விதத்தில் வரைவு அறிக்கை அமைந்துள்ளதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இவர்களின் கருத்தில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. பூர்வகுடிகளின் உரிமைகள் இன்னமும் ஆணித்தரமாக வலியுறுத்தப்பட்டு இருக்கலாம். மரங்களை எரிபொருளாகப் பயன்படுத்துவது சரியா தவறா என்கிற கேள்விக்கு நேரடியாக பதில் இல்லை. வனத் தாவரங்களில் ‘உற்பத்தித் திறன்’ வளர்ச்சி, மறைமுகமாக, வருவாய்ப் பெருக்கத்தையே குறிக்கிறது. இது,1988 கொள்கை காட்டிய திசையில் இருந்து பிறழ்ந்து செல்வது அல்லாமல் வேறென்ன? காடுகள் - இயற்கை நமக்குத் தந்த கொடை. காடுகளின் மீது பூர்வகுடிகளுக்கு இருக்கும் உரிமை, காலம் காலமாகத் தொடர்ந்து வருபவை. இவ்விரண்டு அம்சங்களிலும் இன்னமும் தீர்க்கமான பார்வை வேண்டும். அதுதான், அடுத்தடுத்த தலைமுறையிலும், ‘இயற்கைக் காடுகள்’, இயற்கையாக இருக்க உதவும். தயவு செய்து, காடுகளை வாழ விடுங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x