Published : 16 Apr 2024 07:14 AM
Last Updated : 16 Apr 2024 07:14 AM

‘சுவிட்சர்லாந்தை விட மிக அழகான இடம் காஷ்மீர்’ - அகமதாபாத் ஐஐஎம் முன்னாள் மாணவர் படங்களை வெளியிட்டு தகவல்

புதுடெல்லி: சுவிட்சர்லாந்தை விட மிக அழகான இடங்கள் காஷ்மீரில் உள்ளன என்று அகமதாபாத் ஐஐஎம் முன்னாள் மாணவர் சந்தீபன் காஷ்மீரின் புகைப்படங்களை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டு தகவல் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் ஐஐஎம், ஐஐடி பம்பாயில் படித்த சந்தீபன், தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் காஷ்மீரின் மிக அழகிய இடங்களைப் படம் பிடித்து அண்மையில் வெளியிட்டுள்ளார். காஷ்மீரிலுள்ள நகர், சோன்மார்க், குல்மார்க், பஹல்காம் ஆகிய பகுதிகளில் உள்ள அழகு கொஞ்சும் இடங்களை தனது கேமராவில் படம்பிடித்துள்ளார்.

அந்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அவர் கூறியுள்ளதாவது: பூமியில் உள்ள சொர்க்கம் காஷ்மீர்தான். நான் சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளேன். ஆனால் சுவிட்சர்லாந்தை விட மிக அழகான இடங்கள் காஷ்மீரில்தான் உள்ளன.

மலைகள், பனிசூழ்ந்த சிகரங்கள், பள்ளத்தாக்குகள் எழில்கொஞ்சுகின்றன. அந்தப் புகைப்படங்களை இங்கு வெளியிட்டுள்ளேன். சுவிட்சர்லாந்தை விட காஷ்மீரில் இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள் அதிகம் உள்ளன.

நாங்கள் ஒரு குடும்பமாக காஷ்மீரின் பல்வேறு இடங்களுக்குச் சென்றோம். நீங்கள்இந்த இடங்களுக்கு வந்தால், மீண்டும் வருவதற்கு விரும்புவீர்கள். பூமியில் உள்ள நிஜமான சொர்க்கம்தான் இது.

நீங்கள் காஷ்மீர் செல்லவேண்டுமென்றால் அங்குள்ள முகவர் யாரையாவது தொடர்புகொண்டு ஓட்டல்களை பதிவு செய்யுங்கள். ஒரு குடும்பத்தினர் 4 முதல் 6 இரவுகள் தங்குவதற்கு ரூ.1.3 லட்சம் செலவாகும் (விமானக் கட்டணம் இல்லாமல்). இவ்வாறு சந்தீபன் தெரிவித்துள்ளார்.

சந்தீபனின் புகைப்படங்கள், செய்தியை எக்ஸ் தளத்தில் பார்த்த சிலர், எதிர்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளனர். காஷ்மீர் அழகான பகுதிதான் என்றும், ஆனால் அங்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

வேறு சிலர் கூறும்போது, இந்தியாவில் காஷ்மீரிலும், இமாச்சலும், சுவிட்சர்லாந்தை விட மிகவும் அழகானவை என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x