Published : 16 Apr 2024 07:21 AM
Last Updated : 16 Apr 2024 07:21 AM

கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கொடி இல்லாமல் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று கேரள மாநிலம் வயநாடு பகுதியில் வாகனத்தில் ஊர்வலமாக சென்று பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கொடி பயன்படுத்தப்படவில்லை. படம்: பிடிஐ

வயநாடு: கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் காங்கிரஸும் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. ஆனால் கேரளாவில் இருதரப்பினரும் நேருக்குநேர் மோதுகின்றனர். அந்த மாநிலத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆனி ராஜா, பாஜக சார்பில் அதன் மாநிலத் தலைவர் சுரேந்திரன் களமிறங்கி உள்ளனர்.

வயநாடு மக்களவைத் தொகுதியில் முஸ்லிம்கள் 45 %, இந்துக்கள் 41%, கிறிஸ்தவர்கள் 13% பேர் உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது வயநாடு தொகுதியில் 65 சதவீத வாக்குகளுடன் ராகுல் காந்தி அமோக வெற்றி பெற்றார்.

அப்போதைய தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பச்சை வண்ண கொடிகள் பிரதானமாக இடம்பெற்றன. இவை பாகிஸ்தான் கொடிகள் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வி அடைந்ததற்கு ‘கொடி' விவகாரம் மிக முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த சூழலில் கடந்த 3-ம் தேதிவயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கட்சிகளின் கொடி பறக்கவில்லை. ராகுலின் புகைப்படம் அச்சிட்ட பேனர்களே இடம்பெற்றன.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஹாசன் கடந்த 13-ம் தேதி நிருபர்களிடம் கூறும்போது, “வயநாடு மக்களவைத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கொடியை பயன்படுத்த மாட்டோம். கட்சியின் சின்னத்தை மட்டுமே பயன்படுத்துவோம் என்று தெரிவித்தார். இதற்கான காரணத்தை கேட்டபோது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை.

இதுகுறித்து கேரள வட்டாரங்கள் கூறியதாவது: வயநாடு மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செல்வாக்குமிக்க கட்சியாகக் கருதப்படுகிறது. கடந்த தேர்தலின்போது முஸ்லிம் லீக்கின் பச்சை வண்ண கொடியால் காங்கிரஸுக்கு தேசிய அளவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. எனவே தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் அந்த கட்சியின் கொடியை பயன்படுத்தக்கூடாது என்று காங்கிரஸ் கோரியது.

இதற்கு பதிலடியாக காங்கிரஸ் கொடிகளையும் பிரச்சாரத்தில் பயன்படுத்தக்கூடாது என்று முஸ்லிம் லீக் கண்டிப்புடன் நிபந்தனை விதித்தது. இதன்காரணமாகவே காங்கிரஸ் கொடிகள்பறக்கவில்லை.

கேரளாவில் காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக இருந்தாலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தாளத்துக்கு ஏற்பவே நடனமாடி வருகிறது. தற்போதைய மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் 3 தொகுதிகளை முஸ்லிம் லீக் கோரியது. எனினும் அந்த கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. முஸ்லிம் லீக்கைசமாதானப்படுத்த ஒரு மாநிலங்களவை எம்பி பதவியை வழங்ககாங்கிரஸ் உறுதி அளித்திருக்கிறது.

வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடும் நிலையில் முஸ்லிம் லீக்கின் அனைத்து நிபந்தனைகளையும் காங்கிரஸ் அப்படியே ஏற்றுக் கொள்கிறது. இவ்வாறு கேரள அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x