வேலைக்கு அனுமதி கிடைத்த நிலையில் கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை

வேலைக்கு அனுமதி கிடைத்த நிலையில் கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை
Updated on
1 min read

புதுடெல்லி: ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிராக் அன்டில், வயது 24. கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவுக்கு சென்று அங்குள்ள தெற்கு வான்கூவரில் எம்பிஏ படித்து முடித்துள்ளார். அங்கேயே வேலை செய்வதற்கான அனுமதியும் சமீபத்தில் கிடைத்துள்ளது. கடந்த 12-ம் தேதி இரவு காரில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வான்கூவர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், சிராக் அன்டில் உடலை இந்தியா எடுத்து செல்வதற்கு உதவி செய்ய வேண்டும் என்று இந்திய மாணவர் சங்க தலைவர் வருண் சவுத்ரி, இந்திய வெளியுறவுத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில் சிராக் உடலை இந்தியா எடுத்து செல்வதற்காக, அவரது பெற்றோர் நிதி திரட்டி வருகின்றனர்.

இதுகுறித்து சிராக் அன்டிலின் சகோதரர் ரோமித் அன்டில் கூறும்போது, ‘‘நானும் எனது சகோதரனும் தினமும் பேசுவோம். இருவரும் சிறந்த சகோதரர்களாக இருந்தோம். சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் கூட நான் அவரிடம் பேசினேன். மிகவும் சந்தோஷமாக இருந்தார். யாருடனும் அவருக்கு விரோதம் கிடையாது. மிகவும் கருணை உள்ளம் கொண்டவர். அமைதியானவர்’’ என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in