Published : 15 Apr 2024 06:22 AM
Last Updated : 15 Apr 2024 06:22 AM
போபால்: துணை ஆட்சியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் சேர்ந்தவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து மீண்டும் அரசு பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராக (சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்) வேலை பார்த்து வந்தவர் நிஷா பாங்ரே. இவர் லவ்குஷ் நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற மத்தியபிரதேச பேரவைத் தேர்தலின்போது இவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் சேர்ந்தார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு டிக்கெட் வழங்கப்படும்என்று உறுதி அளிக்கப்பட்டதால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அப்போது அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலிலாவது அவருக்கு டிக்கெட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்அவருக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை. அதற்குப் பதிலாக தற்போது செய்தித் தொடர்பாளர் பதவியை நிஷா பாங்ராவுக்கு காங்கிரஸ் மேலிடம் வழங்கியது. இதுகுறித்து நிஷா பாங்ரே கூறியதாவது:
நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தபோது பேரவைத் தேர்தலில் வாய்ப்பு தருவோம் என்று காங்கிரஸார் தெரிவித்தனர். ஆனால் தரவில்லை. மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு தருவோம் என்றார்கள். ஆனால், வாய்ப்பு வழங்கவில்லை.
கடந்த மாதம் 27-ம் தேதி எனக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவியை கட்சி மேலிடம் வழங்கியது. நான் அதில் சேரவில்லை. இந்நிலையில், நான் மீண்டும் அரசு பணியில் இணைய விரும்புகிறேன். இதைத்தொடர்ந்து, துணை ஆட்சியர் வேலையில் சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளேன்.
நான் பணியில் இருந்தபோது புத்த மத மாநாட்டில் பங்கேற்க அரசு சார்பில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நான் பதவியில் இருந்து விலகினேன். இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் கமல்நாத் தலைமையில், தேர்தலின்போது இந்தப் பிரச்சினையை எழுப்பினோம். ஆனால், தேர்தலில் அது பெரிதாக எடுபடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT