

பெண்கள் கண்ணியமாக ஆடை அணிய வேண்டும் என விமர்சித்த தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில், நேற்று (வியாழக்கிழமை) பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விவாதத்தின் போது பேசிய தெலுங்கு தேச எம்.பி. முரளி மோகன் மகந்தி: "நமது இந்திய கலாச்சாரத்தை சீர்தூக்கும் வகையில், என் சகோதரிகள், மகள்கள் அனைத்து மகளிரும் கண்ணியமாக ஆடை அணிய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இது பாரத மாதாவுக்குச் செலுத்தும் அஞ்சலி ஆகும்" என கூறியிருந்தார்.
இதற்கு சுப்ரியா சூலே(தேசியவாத காங்கிரஸ் கட்சி), குமாரி சுஷ்மிதா தேவ் (காங்கிரஸ்) உள்ளிட்ட உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவை குறிப்பில் இருந்து எம்.பி முரளி மோகன் மகந்தியின் கருத்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் அவையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனையடுத்து, முரளி மகந்தி தனது கருத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். தனது கருத்துக்காக மன்னிப்பும் கோரினார்.
இருப்பினும், இன்று மாநிலங்களவை கூடியவுடன் பெண் உறுப்பினர்கள் இவ்விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்தனர். தெலுங்கு தேச எம்.பி.க்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
காங்கிரஸ் உறுப்பினர் விப்லோவ் தாகூர் கூறுகையில்: தெலுங்கு தேச எம்.பி.யின் கருத்து மனநிலையை பிரதிபலிக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பலர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். இதனால் கேள்வி நேரம் பாதிக்கப்பட்டது. அவைத்தலைவர் ஹமீது அன்சாரி அவையை 15 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.