Published : 14 Apr 2024 08:47 AM
Last Updated : 14 Apr 2024 08:47 AM
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இண்டியா கூட்டணியில் மதிமுகவும் இடம்பெற்றுள்ளது. இதன் தேர்தல் அறிக்கையில் திருக்குறள், தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இண்டியா கூட்டணியின் முக்கிய கட்சியான திமுகவும், திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது. இதுபோல், திருக்குறள் மீதான அறிவிப்புகள் சட்டமன்றங்களிலும், பொது மேடைகளிலும் அதிகமாக எழுந்து வந்தன. முதன்முறையாக பல்வேறு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் திருக்குறள் இடம் பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.
எந்த ஒரு நூலையும் தேசிய நூலாக அறிவிக்க இந்தியாவின் எந்த சட்டத்திலும் இடமில்லை எனக் கூறப்படுகிறது. திமுக, மதிமுகவின் வாக்குறுதிகளை, புதிதாக சட்டம் உருவாக்கி நிறைவேற்ற, மத்திய அரசுதான் முயற்சிக்க வேண்டி இருக்கும். இந்த சூழலில், பாஜகவிலும் திருக்குறள் மற்றும் தமிழ் மொழி குறித்து சில முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பாஜக தேசிய நிர்வாகிகள் கூறும்போது, “தேசிய நூல் அந்தஸ்து அளிக்கும் வாய்ப்புகள் இருந்திருந்தால், கடந்த இரண்டு ஆட்சிகளில் துளசிதாசரின் ராமாயணத்தை நாங்கள் முதலில் அறிவித்திருப்போம். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி), தேசிய மற்றும் சர்வதேச அளவில் தமிழை பிற மொழிகளில் வளர்க்கிறது.
திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கிய நூல்கள் பலவற்றை தமிழக அரசை விட சிஐசிடி அதிகம் வெளியிட்டு வருகிறது. பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் திருக்குறள் பற்றிய ஒரு முக்கிய வாக்குறுதி வெளியாக உள்ளது” என்று தெரிவித்தனர்.
பாஜக தலைமையிலான ஆட்சியில் 2014-ல் திருக்குறள் மீதான குரல் முதன்முறையாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுந்தது. இதை பாஜகவின் எம்.பி.யாக இருந்த தருண் விஜய் எழுப்பியிருந்தார். தொடர்ந்து தமிழகத்திலும் அவர் திருக்குறள் தொடர்பான யாத்திரையை நடத்தினார்.
அப்போது, தருண் விஜய் எம்.பி.யும் தமிழக பாஜகவினரும் மத்திய கல்வி அமைச்சகத்தில் திருக்குறள் தொடர்பாக ஒரு மனு அளித்தனர். இதை ஏற்ற அப்போதைய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இரானி, என்சிஇஆர்டி மொழிப் பாடநூல்களில் திருக்குறள் பாடமாக வைக்கப்படும் என்றார்.
2015 ஜனவரியில் வெளியான இந்த அறிவிப்பு, இன்றுவரை நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியும் திருக்குறளை கையில் எடுத்தார். தொடர்ந்து அவர் தமிழகம் மற்றும் சர்வதேச மேடைகளில் திருக்குறளின் பெருமையை பேசி வருகிறார். 2022 டிசம்பரில் வாராணசியில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமத்தில் பிரதமர் 13 மொழிகளில் திருக்குறள் நூல்களை வெளியிட்டார்.
2023-ல் நடை பெற்ற 2-வது காசி தமிழ்ச் சங்கமத்திலும் 15 மொழிகளில் திருக்குறளை வெளியிட்டதுடன் பார்வையற்றோருக்கான இதன் பிரெய்லி பதிப்பையும் வெளியிட்டார்.
உலகப் பொதுமறையான திருக்குறள் இதுவரை தமிழக அரசு, கல்வி நிலையங்கள், மத்திய அரசு, தனியார் என பல்வேறு தரப்பிலும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஆங்கிலத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகி உள்ளன. இந்தியில் 18, இதர மொழிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகி உள்ளன. சிஐசிடி இந்திய அரசின் கீழ் செயல்படுவதால், வெளிநாடுகளில் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாக சிஐசிடி திருக்குறள் நூல்களே கருதப்படுகின்றன. இந்த வகையில் ஏற்கெனவே, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் மற்றும் பக்தி இலக்கியங்கள் மீண்டும் பலராலும் மொழிபெயர்க்கப்படுகின்றன.
இச்சூழலில், ஏற்கெனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து அவரும் ஒரு இந்து துறவியே என பாஜக சர்ச்சையை கிளப்பியது. எனவே, திருக்குறள் மீதான பாஜகவின் தேர்தல் வாக்குறுதியும் ஒரு அரசியல் சர்ச்சையை கிளப்பும் வாய்ப்புகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT